search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் 10 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் அவதி
    X

    கொடைக்கானலில் 10 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் அவதி

    கொடைக்கானலில் 10 மணி நேர மின் வெட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலா தலமாகும். எனவேதான் வெளிநாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வந்து செல்கிறார்கள்.

    இதன் காரணமாக சுற்றுலா இடங்களில் அதிக அளவில் எப்போதும் கூட்டம் காணப்படும். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கொடைக்கானல் நகரில் ஏராளமான ஓட்டல்கள், லாட்ஜ், தங்கும் விடுதிகள் உள்ளது.

    விடுமுறை காலங்களில் நகர் பகுதியில் கூட்டம் அலை மோதும். கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் அதிகம் உலா வரும் இடமாக பென்ஹில் ரோடு, சிவனடி சாலை பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு உள்ளது.

    நேற்று இரவு 8.20 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று காலை 6.20 மணிக்குதான் மின் இணைப்பு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விடிய விடிய தூக்கத்தை தொலைத்தனர்.

    இந்த பகுதியில் காட்டு மாடுகளும் அதிக நடமாட்டம் இருந்தது. இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியே வராமல் காட்டு மாடுகளுக்கு பயந்து அறைகளில் முடங்கி கிடந்தனர்.

    சுமார் 10 மணி நேர மின் வெட்டால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்து போனது. இதேபோல சுழற்சி முறையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நீடிக்கிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த போது சுற்றுலா நகரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவு காற்றோடு போய் விட்டது. மின் ஊழியர்கள் இதனை கண்டுகொள்வதே கிடையாது. கிராம பகுதியில் மின் கம்பிகள் கைக்கு எட்டும் தூரத்தில் காணப்படுகிறது. இதனை மின் வாரியத்துறையினர் சீரமைக்காமல் அலட்சியத்தில் உள்ளனர். மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அந்த சமயத்திலாவது இது போன்ற வேலைகளை செய்யலாம்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த வி‌ஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி வேலை செய்யாமல் சண்டித்தனம் செய்யும் மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடைக்கானல் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×