search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிவி - ரேடியோக்கள் பறிமுதல்
    X

    புழல் சிறையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிவி - ரேடியோக்கள் பறிமுதல்

    சென்னை புழல் சிறைச்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், எப்எம் ரேடியோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். #PuzhalPrison
    சென்னை:

    சென்னை புழல் சிறையில் சுமார் 3 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் சுமார் 750 பேர் தண்டனை கைதிகள். சுமார் 2 ஆயிரம் பேர் விசாரணை கைதிகள். பெண்கள் சிறையில் சுமார் 150 பேர் இருக்கிறார்கள்.



    தண்டனை பெற்ற கைதிகளில் பெரும்பாலானவர்கள் புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவதாக சமீபத்தில் புகைப்படங்களுடன் தகவல் வெளியானது. ஆடம்பர உடை-ஷூ அணிந்து ஒரு கைதி சொகுசு மெத்தையில் படுத்து இருக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

    தண்டனை கைதிகள் தினமும் வெளியில் இருந்து வரும் அறுசுவை உணவு சாப்பிடுவதும், செல்போனில் பேசுவதும், செல்பி எடுத்து ஜாலியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது தண்டனை கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாதி ஒருவனிடம் இருந்து 2 ஆன்ட்ராய்டு செல்போன்களும், இலங்கையைச் சேர்ந்த கஞ்சா கடத்தல்காரன் ஒருவனிடம் இருந்து நவீன செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் தண்டனை கைதிகள் மிகவும் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து தண்டனை கைதிகள் உள்ள அறைகளில் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா, டி.ஐ.ஜி. கனகராஜ் தலைமையில் போலீசார் இந்த சோதனை நடத்தினார்கள். அப்போதும் சில செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அதன்பிறகு தண்டனை கைதிகள் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்? அவர்களுக்கு யார்-யார் உதவி செய்கிறார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    இதையடுத்து புழல் ஜெயில் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர். தலைமையிடத்து சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. முருகேசனை அழைத்த சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா புழல் ஜெயிலுக்குள் சென்று அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு தலைமையிடத்து சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. முருகேசன் தலைமையில் போலீஸ் படை ஒன்று புழல் ஜெயிலுக்கு சென்றது. அங்கு அவர்கள் தண்டனை கைதிகளின் அறைகளை சோதனையிட்டனர்.

    முதல் வகுப்பு அறைகளில் உள்ள கைதிகளை குறி வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 24 உயர்மட்ட அறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த அறைகளில் உள்ள ஒவ்வொரு பகுதிகளையும் போலீசார் சல்லடை போட்டு ஆய்வு செய்தனர்.

    இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 11 மணி வரை நீடித்தது. இந்த சோதனையில் முதல் வகுப்பு அறைகளில் தண்டனை கைதிகள் 18 டி.வி.க்களை வைத்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்த்து வந்தது தெரிய வந்தது. அந்த 18 டி.வி.க்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அந்த 18 டி.வி.க்களும் உயர்ரக விலைமிகுந்த தொலைக்காட்சி பெட்டிகளாகும். அவை எப்படி புழல் ஜெயிலுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு மலைப்பை ஏற்படுத்தியது. அந்த தொலைக்காட்சி பெட்டிகளுக்கு மின்இணைப்பு வசதியும் செய்து கொடுக்கப்பட்டது எப்படி என்று அதிகாரிகள் திகைத்தனர்.

    தொலைக்காட்சி பெட்டி தவிர 3 எப்.எம். ரேடியோவையும் போலீசார் கைப்பற்றினார்கள். சில பணக்கார கைதிகள் இந்த எப்.எம். ரேடியோக்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஜாலியாக அவர்கள் அந்த ரேடியோக்களில் பாட்டுகளை கேட்டு பொழுதை கழித்து உள்ளனர்.

    இவை தவிர கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிறைத்துறை போலீசார் உதவி இல்லாமல் இவை வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    புழல் ஜெயிலில் கைப்பற்றப்பட்ட செல்போன்களும் அதிநவீனமானவை. அந்த செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பேசப்பட்டு உள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் தனி விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தனியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை கைதிகள் மீதும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத்துறை தலைவர் அசுத்தோஷ் சுக்லா கூறியுள்ளார். #PuzhalPrison

    Next Story
    ×