search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எளிமையாக வாழும் மனபக்குவத்தை மக்கள் வளர்த்து கொள்ள வேண்டும் - கவர்னர்
    X

    எளிமையாக வாழும் மனபக்குவத்தை மக்கள் வளர்த்து கொள்ள வேண்டும் - கவர்னர்

    இந்தியாவில் லஞ்சம், ஊழலை ஒழிக்க மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும் என்று கோவையில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
    கோவை:

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதியன்று நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார். இதன் 125-வது ஆண்டு தொடக்க விழா கோவையில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி கூறியதாவது:-

    சுவாமி விவேகானந்தர் ஒரு ஆன்மிக ஒளி. அதீத சிந்தனையாளர். சுவாமி விவேகானந்தர் பழங்காலம், நவீன உலகம், அறிவியல் உள்ளிட்டவைகளை அறிந்த பன்முக தன்மைகள் உணர்ந்த மனிதராக திகழ்ந்தார். இந்தியாவில் மனித செயல்பாடுகள் மற்றும் ஆன்மிகத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்.

    அதற்கு கடவுள் உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் கூறினார். அமெரிக்காவில் நடந்த துறவிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உதவி பெற வேண்டும் என்ற நோக்கமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் இந்துத்துவத்தை அறிமுகப்படுத்தி அனைத்து மதத்தையும் நேசிக்கும் உணர்வை அவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு பிரதானமாக இருந்தது. அமெரிக்காவில் அவர் பல்வேறு துன்பங்களை முதலில் அனுபவித்தாலும் துறவிகள் மாநாட்டில் அவருடைய முதல் நாள் சொற்பொழிவு அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அமெரிக்க மக்களின் இதயங்களில் நிறைந்தவர் ஆகிவிட்டார். சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க பயண வெற்றி இந்தியாவில் சோம்பி கிடந்த மக்களை புது நம்பிக்கையுடன் எழுப்புவதாக அமைந்தது. அது ஒட்டுமொத்த இந்தியாவையும் தட்டி எழுப்புவதாக இருந்தது.

    இந்தியாவில் ஊழல் பரவி கிடக்கிறது. ஜப்பானில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே இந்தியாவிலும் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அதற்கு மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும். மக்கள் எளிய வாழ்க்கையும், போதும் என்ற திருப்தி உள்ள மனதோடு வாழும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நேர்மையாகவும், எளிமை, மனதிருப்தியுடன் வாழ்பவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரலாம். ஆனால் அவர்கள் தான் கடைசியில் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

    வேதாந்தமே மனித குலத்தின் எதிர்கால மதம் என்றார் சுவாமி விவேகானந்தர். அவருடைய தீர்க்க தரிசன பார்வையில் நவீன அறிவியல் மற்றும் கல்வியால் நாடுகளுக்கு இடையே உள்ள தடைகள் தகர்க்கப்படும். அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஒரே உலகம் உருவாகலாம். ஆனால் அவை அவரவர்களின் இனங்கள், கலாசாரம், மதகோட்பாடுகளை கடந்தால் மட்டுமே சாத்தியம். தூய ஆன்மாவால் மட்டுமே இது சாத்தியம். புதிய உலகில் அறிவியலும், மதமும் இணைய வேண்டும். மனிதனுடன் உள்ளுணர்வு இணைய வேண்டும். மத வேற்றுமைகள் அகன்று மத ஒற்றுமை மேம்பட வேண்டும். மதங்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். வேற்றுமைகளை கைவிட வேண்டும். ஒவ்வொரு மதமும் உயர் பண்புகள் உடைய மனிதர்களை தான் உருவாக்குகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலன்களுடன் இருப்பதோடு பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய சொற்பொழிவு மத நல்லிணக்கம் மற்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்துவதாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கவர்னர் பேச்சை தொடங்கும் போது ‘அனைவருக்கும், மாலை வணக்கம். ஆங்கிலத்தை ஒப்பிடுகையில் தமிழ் மொழி சிறந்தமொழி’ என்றும், பேச்சை முடிக்கும் போது ‘நன்றி வணக்கம்’ என்றும் தமிழில் பேசினார்.
    Next Story
    ×