search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாளை ஸ்டிரைக் - கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு
    X

    பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாளை ஸ்டிரைக் - கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறுவதால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல் - டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் விலை போல பெட்ரோல்-டீசல் விலையும் அன்றாடம் நிர்ணயிக்கப்படுவதால் தினமும் விலை உயர்ந்து வருகிறது.

    சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.40 ஆக இருந்தது. அது தினமும் 50 காசு அளவுக்கு உயர்ந்து தற்போது ரூ.83.22க்கு அதிகரித்துள்ளது.

    இதே போல் ஆகஸ்ட் 30-ந்தேதி ரூ.73.43 ஆக இருந்த டீசல் ஒரு லிட்டர் தற்போது ரூ.76.64-க்கும் விற்கப்படுகிறது.

    பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை (10-ந்தேதி) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    தமிழகத்திலும் நாளை முழு அடைப்பு நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதன் பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும், சென்னையில் மட்டும் 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    முழு அடைப்புக்கு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    இந்த போராட்டம் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு சங்கமான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும்போது, “நாளை கடை அடைப்பு நடைபெறுமா? என்பது குறித்து வணிகர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்” என்றார்.

    ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    முழு அடைப்பையொட்டி நாளை அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஆனால் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்த சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதைப் பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே போல் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், லாரிகளும் பெட்ரோல்- டீசல் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ரெயில்கள் வழக்கம்போல் ஓடும்.

    தமிழகத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, கோவை, நெல்லை உள்பட முக்கிய நகரங்களில் ஏராளமான தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் நாளை ஓடுமா? என்பது பற்றி இன்று மாலை ஆலோசனைக்குப்பின் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் 4½ லட்சம் லாரிகள் ஓடாது என்றும் சம்மேளனத்தின் செயலாளர் தன்ராஜ் கூறினார்.

    நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மூடப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்துள்ளார். #PetrolDieselPriceHike
    Next Story
    ×