
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த பிறகு தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். ஏற்கனவே நிர்வாகிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்தினார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக இளவரசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை சேர்த்தும் வருகிறா£ர்.

இந்த நிலையில் தற்போது மாநில நிர்வாகிகள் 2 பேர் நீக்கப்பட்டு அந்த பதவியும் கலைக்கப்பட்டுள்ளது. மாநில மகளிர் அணி செயலாளர் காயத்ரி துரைசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் சாமுவேல் சர்ச்சில் ஆகியோர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
காயத்ரி துரைசாமி தற்போது தென் சென்னை மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், சாமுவேல் சர்ச்சில் கோவை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து மாநில மகளிர் அணி செயலாளர், மாநில இளைஞர் அணி செயலாளர் ஆகிய 2 பதவிகள் கலைக்கப்பட்டுவிட்டன.
அதே நேரத்தில் தற்போது மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அமைப்பு செயலாளரும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவருமான இளவரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
ரஜினி மக்கள் மன்ற அனைத்து மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணிகளின் அமைப்பு பணிகள், இனி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, மேற்பார்வை மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளர்கள் தினசரி தங்கள் அணிகளின் அமைப்புப் பணி பற்றிய அறிக்கையை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட பொறுப்பாளர் மற்றும் செயலாளரிடம் சமர்பித்து ஒப்புதல் பெற்று அவர்களின் அறிவுரைபடி மன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநில இளைஞர் அணி நிர்வாகிகளும், மாநில மகளிர் அணி நிர்வாகிகளும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் அல்லது மாவட்ட செயலாளர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். கட்சிப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை நிர்வாகிகள் இனி நேரடியாக தலைமைக்கு அனுப்ப முடியாது. அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்குதான் அனுப்ப வேண்டும். இதன் மூலம் மாவட்ட செயலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளில் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கீழ் உள்ளனர். அதே போல் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திலும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே சில வாரங்களில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நம்புகிறார்கள். இது நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram