search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய வழக்கில் 4 பேர் கைது - 2 கார்கள் பறிமுதல்
    X

    வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடிய வழக்கில் 4 பேர் கைது - 2 கார்கள் பறிமுதல்

    மங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன்நகையை திருடிச் சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மங்கலம்:

    மங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன்நகையை திருடிச் சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    மங்கலம் அருகே உள்ள 63 வேலம்பாளையம் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 46). லாரி டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி (33). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 4-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சி சென்றனர். பின்னர் மறுநாள் காலையில் திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டும், அதில் இருந்த துணிகளும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைத்து இருந்த 7 பவுன்நகை திருட்டுப்போயிருந்தது.

    செல்வக்குமார் தனது மனைவியுடன் வெளியூர் சென்று இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு சென்று கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம் போலீசில் செல்வக்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

    மேலும் நகையை திருடியவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரோஜினி தலைமையில் ஒரு தனிப்படையும், முத்துசாமி தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று இடுவாய் காமாட்சி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் இருந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். இதையடுத்து அவர்களை மங்கலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (35), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த குணா (29), திருவாவூர் மாவட்டம் மாவூரை சேர்ந்த சதாம் உசேன் (27) மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (23) என தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் சேர்ந்து செல்வக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்து 7 பவுன்நகையை திருடியதாக ஒப்புக்கொண்டனர். மேலும் கரூர், அத்தனூர், சேலம், காட்பாடி, காஞ்சிபுரம் பகுதிகளில் 2 கார்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேரையும் கைது செய்தபோலீசார் அவர்களிடம் இருந்து 7 பவுன்நகை மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான அனைவரும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    Next Story
    ×