search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 லட்சம் திருட்டு - வாடகை வீட்டுக்காரர் கைது
    X

    கும்பகோணத்தில் வீட்டுக்குள் புகுந்து ரூ.2 லட்சம் திருட்டு - வாடகை வீட்டுக்காரர் கைது

    கும்பகோணத்தில் வீட்டுக்குள் புகுந்து பணம், வெள்ளி பொருட்களை திருடிய சம்பவத்தில் வாடகை வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் பேட்டை ஆறுமுக தெருவில் வசித்து வருபவர் நளினி(வயது 59). இவர் காம்பவுண்டில் வீட்டின் முதல் தளத்தில் குடியிருந்து வருகிறார். மேலும் அந்த இடத்தில் உள்ள 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 5-ந்தேதி, நளினி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் வீட்டை சாவி வைத்து பூட்டாமல் வெறுமனே சாத்தி விட்டு அவசரத்தில் சென்று விட்டார்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து நளினி வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த பீரோவை திறந்து அவர் பார்த்தார். அதில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம் மற்றும் வெள்ளி விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். வீட்டு கதவு பூட்டாமல் மறதியால் சாத்தி விட்டு சென்றதால், யாரோ பணம்-வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கும்பகோணம் போலீசில் நளினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அதே காம்பவுண்டில் 5-வது வீட்டில் வசித்து வந்த வாலிபர் விக்னேஷ் (29) என்பவர் மாயமாகி விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். இதற்கிடையே நேற்று விக்னேஷ், அவரது வீட்டுக்கு வந்தார். இதுபற்றி அறிந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது நளினி வீட்டில் பணம்-வெள்ளி பொருட்களை எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருடிய பணம் ரூ.1 லட்சத்தையும் செலவு செய்து விட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பணம்-வெள்ளி பொருட்களை திருடிய வாலிபர் விக்னேசை கைது செய்தனர். கைதான விக்னேஷ், கும்பகோணத்தில் உள்ள ஒரு லேத்பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    Next Story
    ×