search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதிகளை மீறி வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    விதிகளை மீறி வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை

    விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்த், தனசேகரன், ரவிசந்திரன், மீனாட்சி ஆகியோர் கொண்ட குழுவினர்  கரூர் சுங்ககேட், சுக்காலியூர் ரவுண்டானா, வெங்கக்கல்பட்டி பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை மீறி நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதல் எடையை ஏற்றி கொண்டு வாகனங்கள் வருகிறதா? விபத்தை ஏற்படுத்தும் வகையில் குடித்துவிட்டு அதிகவேகமாக வாகனத்தை யாரும் ஓட்டி வருகின்றனரா? என அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்தனர்.

    அப்போது அந்த வாகனங்களுக்கான இன்சூரன்ஸ், தகுதிச்சான்று உள்ளிட்டவற்றையும் சரிபார்த்தனர். இதில் தகுதிச்சான்றினை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 9 சரக்கு வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோல் சாலைவரியை முறையாக செலுத்தாமல் இயக்கப்பட்ட ஆம்னி பஸ் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக எடை ஏற்றி வந்த 7 சரக்கு வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, இனி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் ஐகோர்ட்டு உத்தரவிட்டதன் பேரில், விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மோட்டார் சைக்கிள், மொபட் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுகின்றனரா?, பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்கிறாரா? என வட்டார போக்குவரத்து அதிகாரி சுப்ரமணியன் மற்றும் குழுவினர் கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 17 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.2,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

    கரூரில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிவது, சிக்னலில் நின்று செல்வது, மிதவேகமாக வாகனம் இயக்குவது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது என்பன உள்ளிட்டவற்றை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க முன்வர வேண்டும்.

    மேலும் சரக்கு வாகனங்களில் ஆடுமாடுகள், மனிதர்கள் உள்ளிட்டோரை ஏற்றி செல்வதும் விதிமீறலாகும். எனவே சரக்கு வாகன ஓட்டிகள் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். விபத்தினை தடுக்கும் பொருட்டு தான் இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாகன விதிகளை மீறும் நபர்களை கண்காணித்து வருகிறோம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×