search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளிகேசம் ரப்பர் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்- தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    காளிகேசம் ரப்பர் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்- தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம்

    காளிகேசம் வனப்பகுதி ரப்பர் தோட்டத்தில் 4 யானைகள் கூட்டமாக நிற்பதை கண்ட தொழிலாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த கீரிப்பாறை, காளிகேசம் பகுதிகளில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளது. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளிகள் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் அதிகாலை நேரத்தில் இவர்கள் பால் வெட்டும் தொழிலுக்கு செல்வது வழக்கம்.

    இதுபோல நேற்று முன்தினமும் தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றனர். தோட்டத்திற்கு சென்றபோது காளிகேசம் வனப்பகுதியில் 4 யானைகள் கூட்டமாக நிற்பதை தொழிலாளிகள் கண்டனர். அதைக்கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளிகள் இதுபற்றி ரப்பர் கழக அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். 

    வனத்துறை ஊழியர்கள் காளிகேசம் பகுதிக்கு சென்று யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்றும் இதே பகுதிக்கு யானைகள் வந்தன. அவை கூட்டமாக நின்றன. இதைக்கண்ட தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்திற்கு செல்லாமல் கீழே இறங்கினர்.

    காளிகேசம் மலைப்பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டமாக ஊருக்குள் வருகிறது. அவைகள் பயிர் நிலங்களை சேதப்படுத்துவதோடு, உயிர் பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இந்த பகுதியில் யானைகள் வராமல் தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்று தொழிலாளிகள் வேண்டு கோள்விடுத்தனர். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×