search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10½ லட்சம் மோசடி - 2 பேர் கைது
    X

    மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10½ லட்சம் மோசடி - 2 பேர் கைது

    மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.10½ லட்சம் மோசடி செய்த அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். #Metrotrain

    சென்னை:

    அரக்கோணத்தைச் சேர்ந்தவர் புருசோத்தமன். இவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து இருந்தார்.

    அதில், “நான் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னை சந்தித்த சிலர் பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.

    அவர்கள் பேச்சை நம்பிய நான், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்தேன். அப்போது அவர்கள் கேட்டபடி ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புருஷோத்தமன் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த புகார் 2015-ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. போலீசார் உடனே வழக்குப் பதிவு செய்தனர். என்றாலும், நீண்ட நாட்களாக இந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில், இந்த பண மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவர் மதுரை வீரன் (48), கண்டக்டர் அர்ஜுனன் (45) ஆகியோரை தேனாம்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையின் போது இந்த பண மோசடியில் மேலும் அஜீஸ், ஜாகிர்உசேன், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த இவர்கள், வேறு யாரிடமும் இதுபோல் ஏமாற்றி இருக்கிறார்களா? மெட்ரோ ரெயில் நிர்வாகத்தைச் சேர்ந்த பிரமுகர்களுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×