search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்த பெண்கள்.
    X
    கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய வந்த பெண்கள்.

    எம்.ஜி.ஆர். நகரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி: கணவன்-மனைவி மீது பெண்கள் புகார்

    சென்னை எம்.ஜி.ஆர். நகரில் ஏலச்சீட்டு நடத்தி தலைமறைவான கணவன்-மனைவி மீது பெண்கள் போலீசில் புகார் அளித்தனர்.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘‘அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன், அவரது மனைவி சாந்தா ஆகியோர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    ஆனந்தன், சாந்தா இருவரும் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதனை நம்பி நாங்களும் சீட்டு கட்டினோம். ஒவ்வொரு முறையும் அவர்கள் கூறியவாறு பணம் திருப்பி கொடுத்தனர்.

    கடந்த 1 மாதத்துக்கு முன்பு இருவரும் திடீரென்று காணாமல் போய் விட்டனர். எங்களைப் போன்று 100-க்கும் மேற்பட்டவர்கள் சீட்டு பணம் கட்டியுள்ளோம். 1 கோடி ரூபாய்க்கு மேல் இருவரும் வசூல் செய்து விட்டு தப்பிவிட்டனர்.

    இதுபற்றி எம்.ஜி.ஆர். நகர் போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இப்போது கமி‌ஷனரிடம் முறையிடுவதற்காக திரண்டு வந்திருக்கிறோம்.

    பாதிக்கப்பட்ட அனைவரும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    புகார் கொடுக்க வந்திருந்தவர்களில் ஒரு பெண் திடீரென்று மயக்கமானார். நெஞ்சு வலிப்பதாக கூறிக்கொண்டு அவர் தரையில் அமர்ந்தார். இதனால் கமி‌ஷனர் அலுவலக வாசலில் பரபரப்பு நிலவியது. அவருடன் வந்த பெண்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.

    இளம்பெண் ஒருவர் சுமார் 20 பெண்களை ஏலச்சீட்டில் சேர்த்து விட்டுள்ளார். ஆனந்தனும், சாந்தாவும் தலைமறைவாகி விட்டதால் இளம்பெண்ணை நம்பி சீட்டு போட்டவர்கள் அவரை தினமும் தொந்தரவு செய்கிறார்கள் என்று அந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.

    Next Story
    ×