search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு பஸ் லாரி மோதல்- கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலி
    X

    சொகுசு பஸ் லாரி மோதல்- கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலி

    குமாரபாளையம் அருகே லாரி மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் கிறிஸ்தவ பாதிரியார் மனைவி, மகன் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
    குமாரபாளையம்:

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு கேரள மாநிலம் அடூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    இன்று அதிகாலை 4.45 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் கல்லூரி அருகே சொகுசு பஸ் வந்தபோது, முன்னால் மூங்கில் பாரம் ஏற்றிச்சென்ற லாரியின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் லாரி கவிழ்ந்து மூங்கில் கம்புகள் எல்லாம் மளமளவென உருண்டோடியது. அதுபோல் சொகுசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிக்குநூறாக சிதறியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பத்தினம்திட்டா மாவட்டம் மங்கரம் பகுதியை சேர்ந்த மாத்யூ என்பவருடைய மனைவி மினிவர்க்கீஸ் (வயது 37) மற்றும் இவர்களது மகன் ஹாசல் லிஜோ(10), கிளீனர் சித்தார்த்(38) ஆகிய 3 பேரும் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.



    மேலும் கேரளாவை சேர்ந்த பயணிகள் அருண் (29), கேஷியல்(26), ஷானு(38), லிஜோ(25), ஷியாம் (30), பிலோமினா(54), பாபு புருசோத்தம், ஷோபல்(38), டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வலிதாங்க முடியாமல் கதறி அழுதனர்.

    அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தகவல் அறிந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம், குமாரபாளையம் தாசில்தார் ராகுநாதன், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அவர்கள் பலியான மினிவர்க்கீஸ், அவரது மகன் ஹாசல் லிஜோ, கிளீனர் சித்தார்த் ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான மினிவர்க்கீஸின் கணவர் மாத்யூ மங்கரம் பகுதியில் கிறிஸ்தவ சபையின் பாதிரியராக உள்ளார். விபத்தில் அவருக்கும் கழுத்தின் பின்பக்கத்தில் அடிப்பட்டது. தனது மனைவி, மகன் இருவரும் தன்கண்முன்னே இறந்ததை கண்டு அவர் கதறி துடித்தார்.

    கேரளாவில் உள்ள அவர்களது உறவினர்களுக்கும் இந்த விபத்து குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து கதறி அழுத வண்ணம் உள்ளனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பஸ் கேரள மாநிலத்தை சேர்ந்த பஸ் என்பது தெரியவந்துள்ளது.

    அதிகாலை என்பதால் தூக்க கலக்கத்தில் டிரைவர் சொகுசு பஸ்சை வேகமாக ஓட்டி வந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×