search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூர்வராததால் பிரச்சினை - வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளியை சூழ்ந்தது
    X

    தூர்வராததால் பிரச்சினை - வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளியை சூழ்ந்தது

    நாகையில் சரியாக தூர்வாரப்படாத வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் பள்ளியை சூழ்ந்ததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அருகே சித்தமல்லியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் 70 பேரும், மாணவிகள் 40 பேரும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் உள்ளனர்.

    தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் ராஜன் வாய்க்கால் மூலம் சித்தமல்லியில் உள்ள படுகை வாய்க்காலுக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்காலில் தண்ணீர் தொடர்ந்து செல்ல முடியவில்லை. இதனால் வாய்க்காலில் இருந்து வெளியேறிய தண்ணீர் நேற்று மாலை சித்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சூழ்ந்தது.

    முழங்கால் அளவுக்கு குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பள்ளியை சுற்றிலும் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் நின்றதால் பள்ளி ‘தீவு ’போல் காணப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன், பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இன்று 2-வது நாளாகவும் பள்ளி முன்பு தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே வளாகத்தில் தேங்கிய தண்ணீரை இன்று 2-வது நாளாக பணியாளர்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி முன்பு தேங்கிய தண்ணீர் அகற்றி விட்டு, வாய்க்காலை தூர்வார முழுமையாக தூர்வார பொதுப்பணி துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×