search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரசாயன கலப்பு பீதி - வானகரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சி
    X

    ரசாயன கலப்பு பீதி - வானகரத்தில் மீன்கள் விலை வீழ்ச்சி

    ரசாயன மீன் பீதியால் வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்தன.
    போரூர்:

    தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பிணத்தை பதப்படுத்த உதவும் ‘பார்மலின்’ என்ற ரசாயனம் கலந்து இருப்பதாக சில நாட்களாக பீதி ஏற்பட்டுள்ளது. இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து வரும் மீன்களில் இந்த ரசாயனம் கலந்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் விற்பனைக்கு வந்த ஆந்திரா மீன்களில் ரசாயனம் கலந்து இருப்பதை அம்மாநில அரசு உறுதி செய்தது. இதையடுத்து ஆந்திரா மீன்களுக்கு அசாம் மாநிலம் தடை விதித்து இருக்கிறது.

    சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, வானகரம் மார்க்கெட்டுகளில் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில மீன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ரசாயன மீன் பீதியால் இந்த மீன் மார்க்கெட்டுகளில் தற்போது மீன் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

    வானகரம் மீன் மார்க்கெட்டில் மொத்தம் 52 கடைகளில் வியாபாரிகள் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த பீதியால் இங்கு வழக்கத்தை விட மீன் வியாபாரம் குறைந்து விட்டது. விலையும் சரிந்துள்ளது.

    இதுகுறித்து மீன் வியாபாரி சரவணன் கூறும்போது, ‘‘ரசாயன மீன் பீதியால் வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளன.

    இதனால் மீன் விலையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. மீன்களில் ரசாயனம் கலப்பது இல்லை’’ என்றார்.

    மீன்வியாபாரி குரு கூறும் போது, ‘‘ வானகரம் மீன் கார்க்கெட்டு, காசிமேடு, பாண்டிசேரி, கடலூர் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து தினமும் 8 முதல் 10 லாரிகளில் மீன்கள் விற்பனைக்கு வருகிறது.

    ரசாயன பீதியால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்கள் விலை கடுமையாக சரிந்துவிட்டது. நாளை ஆடி மாதம் தொடங்குவதால் மீன் விலை இன்னும் சரிவடையும்’’ என்றார்.

    காசிமேடு மீன் மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக மீன்வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது. பெரும்பாலும் வெளிமாநில மீன்களில் ரசாயனம் கலக்கப்படுகிறது என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க வியாபாரிகளும், பொது மக்களும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த வாரத்தை விட மீன்விலை அதிகரித்து இருந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம்போல் காசிமேடு மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, ‘‘ரசாயனம் கலப்பு பீதியால் கடந்த வாரம் காசிமேடு பகுதிகளில் மீன் விற்பனை சரிந்தது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கே போதாது. அப்படி இருக்க மீன்களை பதப்படுத்த ரசாயனம் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தற்போது காசிமேட்டில் வழக்கம்போல் வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்கள் வாங்கிச் செல்கிறார்கள்’’ என்றனர்.

    காசிமேட்டு மீன் மார்க்கெடில் மீன்விலை விபரம் வருமாறு (அடைப்புக்குள் கடந்த வாரம் விலை):-

    பெரிய வஞ்சிரம் ரூ.700 (500), சிறிய வஞ்சிரம் ரூ.400 (320), வவ்வால் ரூ.380 (310), சங்கரா ரூ.220 (190), சீலா ரூ.200 (180), கொடுவா ரூ.250 (200), கவளை ரூ.70 (35), நாக்குமீன் ரூ.280 (200), பாறை ரூ.280 (220), கிழங்காமீன் ரூ.200 (180), வாள மீன் ரூ.125 (90).
    Next Story
    ×