search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 72 அடியாக உயர்ந்தது

    மேட்டூர் அணைக்கு 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டுகிறது.

    தொடர் மழையால் அங்குள்ள கபினி கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக உயர்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணையின் நீர்மட்டம் 117 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு 37 ஆயிரத்து 783 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 2 அல்லது 3 நாட்களில் கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிடும்.

    தற்போது அணையில் இருந்து 3 ஆயிரத்து 768 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஹாரங்கி அணையில் இருந்து 12 ஆயிரத்து 338 கன அடி தண்ணீரும் ஹேமாவதி அணையில் இருந்து 3 ஆயிரத்து 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு செல்கிறது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் அணை வேகமாக நிரம்புகிறது. ஓரிரு நாளில் இந்த அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    கபினி அணைக்கு நேற்று 47 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது.

    கபினி அணையில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 8-ந்தேதி தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.

    நேற்று இரவு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்ட படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் ஐவர்பாணி என்றழைக்கப்படும் ஐந்தருவி பகுதியில் பாறைகள் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது. பரிசல் சவாரி செய்வதற்கும் தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இறங்கி விடாத வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை 34 ஆயிரத்து 426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை 71.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று பிற்பகல் 72 அடியை தொட்டது. கடந்த 3 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    தற்போது கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 47 ஆயிரம் கன அடி தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும். இன்னும் ஒரு வாரத்தில் அணையின் நீர் மட்டம் 90 அடியாக உயர வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நீர்மட்டம் 71 அடியை தாண்டியதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலை நீரில் மூழ்கி வருகிறது. காவிரி கரையோரத்தில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களது உடமைகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு மேடான பகுதிக்கு சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதிகளில் நீரோடை போல் காணப்பட்ட காவிரி ஆறு தற்போது பரந்துவிரிந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #MetturDam
    Next Story
    ×