search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
    X

    450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா: ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

    நாகை மாவட்டத்தில் 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    “2004 ம் ஆண்டு சுனாமி எனும் பேரிடரை தமிழகம் சந்தித்த போது, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசு அலுவலர்களை முடுக்கி விட்டு, சுனாமியால் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், வீடு, உடைமைகள் உள்ளிட்டவற்றை இழந்து, உணவு, உடையின்றி தவித்த மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், போர்க்கால அடிப்படையில் செய்திட அறிவுறுத்தினார். இதன் மூலம் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இந்த போர்க்கால நடவடிக்கையினை பார்த்து உலகமே வியந்தது. இயல்பு நிலைக்கு திரும்பினாலும் அவர்களது நிரந்தர வாழ்விடத்தை உறுதி செய்யும் வகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியின் மூலம் தனியாரிடம் நிலம் வாங்கி நில ஆர்ஜிதம் செய்து, குடியிருப்புகள் கட்டப்பட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு அடிமனைப் பட்டா வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கிராம மற்றும் வட்ட கணக்குகளில் உரிய பயனாளிகளின் பெயரில் மாற்றம் செய்து பட்டா வழங்கப்படுகிறது.

    சுனாமி நிரந்தர குடியிருப்புகள் வழங்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த குடியிருப்புகளை பழுது நீக்கம் செய்து கொள்ளவும், அல்லது வங்கிக்கடன் பெற்று புதிதாக கட்டிக்கொள்ள ஏதுவாகவும், பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இன்றைய தினம் வானகிரி, மேலையூர் கிராமங்களைச் சேர்ந்த 450 மீனவ குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகள் மேற்கோண்டு வருகிறது. சுனாமி வீடு பழுதுபார்ப்பதற்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீன்வளக் கல்லூரியில் பயில மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத இடஓதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வானகிரி, செருதூரில் முகத்து வாரங்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகமும், தலைஞாயிறில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, வெள்ளப்பள்ளம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைத்திட தமிழக அரசு மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மயிலாடுதுறை ஆர்.கே.பாரதிமோகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×