search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
    X

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பீதிடையந்துள்ளனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்டது தாழியூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயி. இவர் வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.மேலும் வீட்டின் முன் மாடுகளை கட்டி வைக்க கொட்டகை அமைத்துள்ளார். அங்கு அரிசி, தவிடு, புண்ணாக்கு உள்ளிட்டவைகளை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்.

    நள்ளிரவு 1 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஒற்றை காட்டு யானை அங்கு வந்தது. இந்த யானை மாட்டு கொட்டகையில் வைத்திருந்த அரிசியை கொட்டியது.புண்ணாக்கு, தவிடு மூட்டைகளை பிரித்து அதனை தின்றது. பின்னர் கொட்டகையை பிரித்து எறிந்தது. சத்தம் கேட்டு ராஜ கோபால் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்தனர்.

    அவர்களை யானை துரத்தியது. ராஜகோபால் தவிர மற்றவர்கள் வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டனர். ராஜகோபால் மட்டும் வெளியே நின்று கொண்டிருந்தார்.

    அவரை யானை துரத்தியது. அவர் வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி ஓடினார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே யானையை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு விரட்டி விட்டனர். யானை சேதப்படுத்திய மாட்டு கொட்டகையின் சேத மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.கடந்த 10 நாட்களில் ராஜகோபால் வீட்டிற்கு யானை புகுந்தது இது 3-வது முறையாகும். கடந்த 2 முறை புகுந்த போது அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை சேதப்படுத்தியது.

    தற்போது மாட்டு கொட்டகையை பிரித்து ராஜபோபாலை தாக்க முயன்றுள்ளது.இந்த யானை காயத்துடன் காணப்படுவதாகவும் அதற்கு மதம் பிடித்து இருக்கலாம் எனவும் ராஜகோபால் தெரிவித்தார். தனது வீட்டையே தொடர்ந்து யானை தாக்கி வருவதால் அவர் பீதியில் உள்ளார். எனவே யானை ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×