search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி அருகே குடிநீர் ஊரணியை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை
    X

    சாயல்குடி அருகே குடிநீர் ஊரணியை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை

    சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் குடிநீர் ஊரணியை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாயல்குடி:

    சாயல்குடி அருகே உள்ள எஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் எஸ்.வாகைக் குளம், ஆலங்குளம், ராசி குளம், எஸ்.எம். இலந்தை குளம், திட்டங்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.

    இதில் திட்டங்குளம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

    இந்த கிராமத்தில் உள்ள ஊரணி தூர்வாரப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஊரணியில் உள்ள கிணற்றில் திட்டங்குளம் மற்றும் ராசிகுளம் கிராம மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர்.

    கடந்த மழைக்காலங்களில் ஊரணியில் தண்ணீர் தேக்க முடியாத நிலை இருந்ததால் கிணற்றில் உள்ள நீரும் வற்றிவிட்டது. அதனால் 3 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் கிராம மக்கள் உள்ளனர்.

    இதுகுறித்து திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்த அழகர் சாமி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கிராமத்தில் உள்ள ஊரணியை தூர்வார வில்லை. அதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. மழை காலங்களில் இந்த ஊரணியில் தண்ணீர் தேக்கி வைத்தால் கோடை காலத்தில் அதில் உள்ள கிணறு மூலம் எங்கள் கிராமம் மட்டும் இல்லாமல், அருகில் உள்ள கிராமங்களும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன.

    தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதுசம்மந்தமாக பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தில் உள்ள ஊரணியை சரி செய்ய நடவடிக்கை எடுத்து இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்.
    Next Story
    ×