search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் காமலாபுரத்தில் இருந்து சின்னத்திருப்பதி செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாரம் இரண்டு முறை மேட்டூர் தண்ணீரும், மற்ற நாட்களில் அதே பகுதியில் உள்ள ஆள் துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்தும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் காமலாபுரத்தில் இருந்து சின்னத்திருப்பதி செல்லும் சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலை அமைக்க குழி தோண்டப்பட்ட போது குடிநீர் குழாய்கள் அனைத்தும் உடைந்தது. இதை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அந்த பகுதி மக்கள் காமலாபுரத்தில் இருந்து சின்னத்திருப்பதி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் இன்று சனிக் கிழமை என்பதால் சின்ன திருப்பதி கோவிலுக்கும் செல்லும் பொதுமக்கள் மற்றும் காலை நேரத்தில் கிராமங்களில் இருந்து நகர பகுதிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதனால் இந்த சாலை மறியலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றன, மேலும் இது குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் பதித்து குடிநீர் வினியோகிக்கும் வரை லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து வினியோகிப்பதாக தெரிவித்ததையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×