search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச். ராஜா உருவப்பொம்மை எரித்த தி.மு.க.வினர் மீது வழக்கு
    X

    எச். ராஜா உருவப்பொம்மை எரித்த தி.மு.க.வினர் மீது வழக்கு

    பா. ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, கனிமொழி எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவப்பொம்மையை எரித்தனர்.

    நாகர்கோவில்:

    பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா, கனிமொழி எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் எச். ராஜாவின் உருவப் பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு குமரி மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவராஜ் தலைமையில் தி.மு.க.வினர் எச். ராஜாவின் உருவப் பொம்மையை எரித்தனர். இது குறித்து கோட்டார் போலீசார் சிவராஜ் உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வேப்பமூடு சந்திப்பு, வெள்ளமடத்தில் எச். ராஜாவின் உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன் உள்பட 20 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோட்டார் போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    மணவாளக்குறிச்சியில் எச். ராஜாவின் உருவப் பொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். ஒன்றிய செயலாளர் குட்டி ராஜன் உள்பட 13 பேர் மீது 4 பிரிவுகளில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை, திருவட்டார் பகுதிகளிலும் எச். ராஜாவின் உருவப்பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். கருங்கல் பகுதியில் எச். ராஜாவின் உருவப்பொம்மையை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்து கண்டனத்தை தெரிவித்தனர்.

    Next Story
    ×