search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்- தந்தை கண் முன்னே பெண் பலி
    X

    ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்- தந்தை கண் முன்னே பெண் பலி

    திருப்பூர் அருகே ஸ்கூட்டர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பரிகார பூஜை செய்ய வந்த பெண், தந்தை கண் முன்னே பலியானார். இதனால் அந்த பஸ்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கினார்கள்.
    அனுப்பர்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். என்ஜினீயர். இவருடைய மனைவி பாரதி (வயது 30). இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாரதி, தனது குடும்பத்தில் தோஷம் நீங்க, பரிகார பூஜை செய்ய திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த திருமுருகன் பூண்டி மாதேஸ்வரன் கோவிலில் உள்ள ராகு, கேது ஸ்தலத்திற்கு செல்ல முடிவு செய்து இருந்தார்.

    இதையடுத்து நேற்று பாரதி தனது தந்தை சின்னசுப்பையனுடன் ஸ்கூட்டரில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து திருமுருகன் பூண்டி மாதேஸ்வரன் கோவிலில் உள்ள ராகு, கேது தலத்திற்கு வந்து கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சின்னசுப்பையன் ஓட்டினார். பின் இருக்கையில் பாரதி, பூஜை பொருட்களுடன் அமர்ந்து இருந்தார்.

    இவர்களுடைய ஸ்கூட்டர் திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது இவர்களுக்கு பின்னால் அவினாசியில் இருந்து திருப்பூர் வழியாக விஜயாபுரம் செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் திடீரென்று சின்னசுப்பையன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டருடன் சின்னசுப்பையனும், பாரதியும் கீழே விழுந்தனர்.

    அப்போது பஸ்சின் முன் சக்கரம், பாரதி மீது ஏறி இறங்கியது. இதில் தந்தையின் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பாரதி உடல் நசுங்கி பலியானார். மேலும் அவர் கொண்டு வந்த பூஜை பொருட்களும் ரோட்டில் சிதறிக்கிடந்தன. இந்த விபத்தில் சின்னசுப்பையன் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விரைந்து வந்து, தனியார் பஸ்சின் கண்ணாடியையும், அந்த பஸ்சையும் அடித்து நொறுக்கினார்கள். இதனால் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சுரேஷ்குமார் (27) மற்றும் கண்டக்டர்கள் சங்கர், கல்யாணசுந்தரம் ஆகியோர் அனுப்பர்பாளையம் போலீசில் சரண்அடைந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலத்த காயம் அடைந்த சின்னசுப்பையனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×