search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    சேலத்தில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

    சேலத்தில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களது வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் கோரிமேட்டில் தொழிலாளர் நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளர் ஆய்வாளராக ஈரோட்டைச் சேர்ந்த லட்சுமிநாராயணன் (வயது 45), உதவி ஆய்வாளராக சேலத்தை சேர்ந்த ஹேம லதா ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் நகரைச்சேர்ந்த அணில்குமார் (48) என்பவர் மின்னாம்பள்ளியில் புதிதாக எண்ணை மில் ஒன்றை தொடங்கினார்.

    இதற்காக பொட்டல பொருள் பதிவு சான்று பெறுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொழிலாளர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அப்போது லட்சுமி நாராயணன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு சான்று தருவதாக கூறினார். ஆனால் அணில்குமார் லஞ்சம் கொடுக்காததால் பதிவு சான்று வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.

    இதுகுறித்து அணில் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அளித்த அறிவுரையின் பேரில் நேற்று முதற்கட்டமாக ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை லட்சுமி நாராயணனிடம் அணில்குமார் கொடுக்க முயன்றார்.

    அதை அவர் வாங்காமல் உதவி ஆய்வாளர் ஹேமலதாவிடம் கொடுக்குமாறு கூறினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி ஆய்வாளர் ஹேமலதா மற்றும் லஞ்ச பணத்தை வாங்க கூறிய ஆய்வாளர் லட்சுமி நாராயணன் ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தொடர்ந்து இதுபோல் வேறுநபர்களிடம் லஞ்சம் வாங்கினார்களா? என்பதும் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களது வீட்டிலும் சோதனை செய்ய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். லஞ்ச வழக்கில் கைதானதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×