search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் புளூ வேல் விளையாட்டை தடை செய்ய சட்டம்: நாராயணசாமி தகவல்
    X

    புதுவையில் புளூ வேல் விளையாட்டை தடை செய்ய சட்டம்: நாராயணசாமி தகவல்

    மத்திய அரசு புளூ வேல் விளையாட்டை தடுக்க கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் புதுவையில் சட்டம் கொண்டு வந்து விளையாட்டை தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் நாராணயசாமி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புளூவேல் விளையாட்டினால் இளைஞர்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது சமுதாயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விளையாட்டுக்கு காரணமானவர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பயந்து இரவில் தூங்காமல் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

    இந்நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் படித்த சசிபோரா என்ற மாணவர் கல்லூரி விடுதிக்கு வெளியே தற்கொலை செய்துள்ளார். இவர் புளூவேல் விளையாட்டினால்தான் தற்கொலை செய்தாரா? அல்லது மன அழுத்தம், குடும்ப பிரச்சனை காரணமா? என்ற விசாரணை நடந்து வருகிறது.

    புதுவை மாநிலத்தில் புளூவேல் விளையாட்டை யாரும் விளையாடுகிறார்களா? என சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். விளையாட்டை விளையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் தங்கள் உயிரை இந்த விளையாட்டிற்காக மாய்த்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

    மத்திய அரசும் இந்த விளையாட்டை தடுக்க கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் புதுவையில் சட்டம் கொண்டு வந்து விளையாட்டை தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கும்.


    தமிழகத்தில் நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காத மாணவி அனிதா தற்கொலை செய்துள்ளார். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நீட் தேர்வில் புதுவைக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக மத்திய அரசுக்கு கடிதங்களும் அனுப்பியுள்ளோம். ஆனால், நம் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

    நீட் தேர்வு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதனால் புதுவை மாணவர்களை நீட் தேர்வின் மூலம் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டது. இருப்பினும் புதுவை மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துள்ளோம்.

    மொழிவாரி, மதவாரி சிறுபான்மை கல்லூரிகளில் புதுவை மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். நீட் தேர்வில் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த பண்டிகையை பயன்படுத்தி மாமூல் வசூல் வேட்டை நடக்கிறது. போலீசார், தீயணைப்பு துறையினர், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் இத்தகைய வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த ஆண்டு இந்த வசூல்வேட்டையை தடுத்து நிறுத்தினோம். இந்த ஆண்டு இதுபோல மாமூல் வசூலிப்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கவர்னரின் செயலருக்கு மத்திய உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதே? என்று நிருபர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால், யாரிடமும், எந்த அனுமதியும் பெறாமல் கவர்னரின் செயலர் தன்னிச்சையாக சென்டாக் விவகாரத்தில் மனு செய்தார்.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தோம். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ, விரோதமோ கிடையாது. விதிமுறைகளை மீறியதால் புகார் செய்தோம். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×