search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம்
    X

    பெண்களை மட்டுமே குற்றம் சொல்லும் சமூகம்

    சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.
    இயலாமையில் வெளிப்படும் அந்த இளம் பெண்ணின் அபய குரல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வலுக்கட்டாயமாக நமது கண்களில் வந்து விழுந்துவிட்ட இந்த காணொலி காட்சியை கண்ட மனம் பதைபதைக்கிறது. அவள் கதறிக்கொண்டிருக்க ஒன்றுமே நடவாததுபோல் நின்று கொண்டு சாதாரணமாக பேசிக்கொள்ளும் மனித மிருகங்களைப் பார்க்கையில் ரத்தம் கொதிக்கிறது. தமிழ்த் தாய்மார்கள் பெற்ற ஆண் பிள்ளைகள் தானா இவர்கள்?

    பொள்ளாச்சி ‘சீ சீ’ என புளுத்து நாறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இன்னும் நூற்றுக்கணக்கான பெண்களாம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களாம். ஏழு ஆண்டுகளாகவே இது நடக்கிறதாம். இது தொடர்பாக எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கட்டுரை இப்படிச் சொல்கிறது. “போதை தரும் ஒரு விளையாட்டாக அந்த ஆண்கள் இதைச் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள்”. போதையோடு அவர்களுக்கு பண மழையும் பொழிந்திருக்கிறது. இந்த அநியாயத்தை ஒரு தொழிலாகவே தொடர்ந்திருக்கிறார்கள். இப்போதாவது இது வெளியே வந்ததே என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சில நூறு பெண்களின் வாழ்வு சிதைக்கப்படாமல் தடுக்கப்பட்டதே இனி சட்டம் வேகமாக தன் கடமையைச் செய்யட்டும்.

    பொள்ளாச்சியில் மட்டுமல்ல, நமது ஊரில், நமது பக்கத்திலேயே இதுபோன்று நடந்து கொண்டிருக்கலாமோ என்றதோர் அச்சம் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ள அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் இந்த வேட்டை நாய்களின் கோரப் பற்களின் பிடியில் இருந்து நம் பெண் குழந்தைகளை காப்பாற்ற நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய வேண்டி இருக்கிறது.

    இந்த நிகழ்வில் கதறும் அந்தப் பெண் அங்கே எப்படிச் சென்றாள்?. அவள் சமூக ஊடகச் சாதனங்கள் அழைத்துச் சென்ற சக்கர வியூகப் பொறிக்குள் தானே வலிய சென்று மாட்டிக் கொண்டிருக்கிறாள். வெறி நாய்கள் சூழ்ந்து நிற்க செய்வதறியாது துடிக்கிறாள். இந்த சக்கர வியூகம் ஒரே நாளில் வகுக்கப்படுவதில்லை. சிறிது சிறிதாக பின்னப்பட்டு, நண்பன் என்ற பெயரில் நம்பிக்கை ஊட்டப்பட்டு, நாளாவட்டத்தில் இளம் பெண்கள் இந்த வியூகத்திற்குள் நகர்த்தப்படுகிறார்கள்.

    சமூக ஊடகங்களில் தங்கள் அந்தரங்கங்களைப் பந்தி வைக்க ஆரம்பிப்பதில் இருந்து தொடங்குகிறது வேட்கைப் பொறியை நோக்கிய நகர்வு. சுய முகங்களைக் காட்டிக்கொள்ளாமல் பெண் தோழிகளைப் போலவே பேசி உணர்வுகளின் வீச்சை அறிந்து கொண்டு அல்லது அவற்றைத் தூண்டி விட்டு ஏதோ ஒரு சொல்லில் தன்னிலை மறந்து தன் வலிமையின்மை வெளிப்படும்போது இந்த சக்கர வியூகத்திற்குள் இப்பெண்கள் ஏற்கனவே வந்து விட்டிருப்பார்கள், ஒரு கொடியவனிடம் மாட்டிக் கொள்வதே கொடுமை. ஆனால் கொடியதொரு ஓநாய் கூட்டத்திடம் அகப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த பொள்ளாச்சி இளம்பெண்கள்.

    ஒரு நாள் பொழுதைக் கடக்கையில் தான் செய்வது அனைத்தையும் செல்போன் கேமராவில் ஏற்றி, அதை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கும் பழக்கம் இளம் பெண்கள் இடையே ஒரு நோயாக தொற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இளம் பெண்களுக்கு இந்த நிகழ்வு ஒரு கண் திறப்பு இந்த சுய காட்சிப்படுத்தலானது கயவர்களுக்கும் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த பெண்களால் அறிய முடிவதில்லை.

    வாட்ஸ் -அப்பில் முகம் தெரியாதவர்களுடன் கூட தேவையற்ற நட்பு பாராட்டுவது, கருத்துகளை வெளிப்படுத்துவது, படங்களைப் பகிர்ந்து கொள்வது, அக நூலாய் மாறிக்கொண்டுள்ள முக நூலில் அந்தரங்க ஆசைகளை வெளிப்படுத்துவது, நண்பர்கள் என்ற பெயரில் அறிமுகம் ஆகும் கயவர்களின் ஆசை வார்த்தைகளை அப்படியே நம்புவது, ஒரு கட்டத்தில் அவர்களின் வார்த்தைகளில் மயங்கி உடன் செல்லத் துணிவது, தான் மட்டும் தனியே சென்று சிக்கிக்கொள்வது என இந்த வியூகப் பாதையின்படி நிலைகள் அதிகம்.

    அப்படி சிக்கிக் கொண்டு விட்டதை ஓநாய்கள் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியபோது பணம் கொடுத்து வந்ததும், பணம் கொடுக்க முடியாதவர்கள் உடலைக் கொடுத்து வந்ததும் இயலாமையின் உச்ச கட்டம். ஒரு முறை உடலைப் படம் எடுத்துக் கொண்டு விட்டான் என்பதற்காக அந்தப் படம் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில் மீண்டும் மீண்டும் அவர்களிடமே சென்று வீழ்ந்து கொண்டிருந்த பெண்கள் உண்மையிலேயே கல்வியறிவு பெற்றவர்கள் தானா என ஐயம் கொள்ள வேண்டியுள்ளது.

    பெண்ணின் உடலில்தான் குடும்பத்தின் மானம் அடங்கியுள்ளது என்ற சமூக விழுமியத்தின் தலைவிதி இது. இக்கயவர்கள் கூட்டத்திடம் அகப்பட்டிருந்த முதல் பெண்ணானவள் நண்பன் என்று நம்பப்பட்டவன் தன் உடலைப் பொருளாக்கி வீழ்த்திய போதே அதை தன் குடும்பத்தினரிடம் கூறி வெளிக் கொணர்ந்து இருந்தால் இத்தனை பெண்கள் தங்கள் கண்ணியத்தை இழந்திருக்க வேண்டியதிருந்திருக்காது. ஆனால் அந்தப் பெண் இதை துணிவுடன் வெளியில் பேச அவளுக்கு நம் சமூகம் சொல்லித் தந்திருக்கவில்லை.

    பெண்களாக சென்று ஏன் இப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் என சிலர் பட்டிமன்றம் பேசலாம். இங்கே நடப்பது நம்பிக்கைத் துரோகம். நம்பி வந்தவன் கைவிடும் அவலம். வழக்கம்போல் பெண்களை மட்டுமே குற்றம் சொல்லி விட்டு இதனைக் கடந்து விட முடியாது. ஆண்கள் சரியான சமூக புரிதலுடன் வளர்க்கப்படுகிறார்களா என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது. தன்னை நம்பி வரும் பெண்ணை கண்ணியத்துடன் நடத்துபவனே உண்மையான ஆண் மகன்.

    இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண் குழந்தைகளை வளர்க்கும் சமூகம், ஆண் குழந்தைகளுக்கு சமூக விழுமியங்களைக் கற்றுத்தர மறப்பதும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இட்டுச் செல்கிறது. செல்போன், ஐபேட் போன்ற சாதனங்களின் மூலம் பரந்து விரியும் மாய உலகனுள் பரவிக் கிடக்கும் விரசத்திற்குள் நம் குழந்தைகள் மாட்டிக்கொள்ளாமல் அவர்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சுதந்திர உணர்வோடு, சுய நம்பிக்கையோடு ஆனால் அதே சமயம் தன்னை தற்காத்துக்கொள்ளும் தெளிந்த அறிவோடு திகழ்ந்து கொள்ள பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும்.

    பா.ஜோதி நிர்மலாசாமி, ஐ.ஏ.எஸ்.
    Next Story
    ×