search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    விபத்தும் உயிரிழப்பும்... பெண்கள் அறிந்திருக்க வேண்டிவை
    X

    விபத்தும் உயிரிழப்பும்... பெண்கள் அறிந்திருக்க வேண்டிவை

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
    திடீரென எதிர்பாராத சூழ்நிலை வந்தால் அதைச் சமாளிக்கத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதைப் பற்றி பெண்களிடம் வலியுறுத்துவதைப்போலவே, ஆண்களிடமும் பேச வேண்டியுள்ளது. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை இவைதாம்…

    பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுக்க வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 15 மடங்காவது காப்பீட்டுத் தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காப்பீடு குறித்துத் திட்டமிடும்போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல், நாமினியாகத் தன்னை நியமிக்கச் சொல்லி வலியுறுத்துதல், நாமினியின் விவரங்களைச் சரியாக எழுதுதல் (பெயர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.

    எங்கெல்லாம் ஜாயின்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக்கணக்கு, அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும்) அவையெல்லாம் இருவர் பெயரிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    அப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னென்ன சேமிப்புகள்/முதலீடுகள் உள்ளன, அவற்றைக் கணவரின் ஆயுளுக்குப் பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் தவறோ, சென்ட்டிமென்டோ எதுவும் இல்லை.

    உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக யார் யாருக்கு என்னென்ன சேர வேண்டும் என உயிலில் எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துகளோடு வையுங்கள். உயில் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை மாற்றி எழுதலாம். ஒருமுறை எழுதிவிட்டால் கன்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.



    பிள்ளைகள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனைவியையே நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியைப் பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்.

    வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுன்ட் லாகின், இ-மெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்டுகளையும் இருவரும் அறிந்த ஓரிடத்தில் (லேப்டாப், நோட்புக்) சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் தவறாமல் அதில் அப்டேட் செய்துவிடுங்கள்.

    கணவன் மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன்கள் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது. திடீரென ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் என்றால் மற்றவர் அந்த போன் நம்பரைத் தொடர்ந்து உபயோகிக்க இயலும். செல்போனில் வரும் ஓடிபி (One Time Password) இல்லாமல் வங்கிக் கணக்கு, இணையப் பணப்பரிவர்த்தனை என எதிலும் பாஸ்வேர்டு மாற்றுவது கடினம்.

    பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து 10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, இருவருமாகச் சேர்ந்து அவற்றுக்கான பதில்களை உள்ளீடு கொடுத்து வையுங்கள். அவற்றையும் பாஸ்வேர்டு ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒருவேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்டு தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.

    குழந்தை பிறப்புக்குப் பின் குடும்ப நிர்வாகியாக மாறும் பெண்கள், குழந்தைகள் ஓரளவு வளர்ந்து முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் மீண்டும் வேலைவாய்ப்பு தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறைகளிலும் பெருகியிருக்கின்றன. அவற்றை பற்றிப் பெண்கள் யோசிப்பதும் முக்கியம்.

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாதவரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே. ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 
    Next Story
    ×