search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தலையாய பிரச்சினையாக உருவெடுக்கும் “சைனஸ் பாதிப்பு”
    X

    தலையாய பிரச்சினையாக உருவெடுக்கும் “சைனஸ் பாதிப்பு”

    சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடந்த காலங்களை விட தற்போது சுற்றுப்புறச் சூழல், பொருந்தாத உணவுகள், உடல் உழைப்பற்ற வாழ்வு போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கை முறை சார்ந்த பாதிப்புகளால் வரும் நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதில் சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் என்பது முக எலும்புகளில் இருக்கும் காற்று குழியறைகளில் உருவாகும் பாதிப்பாகும். சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து மதுரை செல்லூர் பழனியாண்டவர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கண்ணப்பன் விளக்குகிறார்.

    சைனஸ்

    சைனஸ் என்பது முகத்தின் எலும்பு அமைப்பில் இருக்கும் வெற்றிடமான குழியறைகள் ஆகும். முகத்தில் இரண்டு பக்கங்களிலும் தலா இரண்டு குழியறையாக நான்கு சைனஸ் குழியறைகள் உள்ளன. இந்த குழியறைகளை மூக்குடன் இணையும் வகையில் பாதை அமைப்பு உள்ளது. மூக்கு மற்றும் சைனஸ் குழியறைகளுக்கு காற்றும், மியூகஸ் எனப்படும் சளி, திரவம் போல் காணப்படும். இந்த பாதையில் ஒரு மெல்லிய சவ்வுப்படலம் காணப்படுகிறது.

    மூக்குப்பகுதியை பாதிக்கும் எந்த ஒரு நோய்த் தொற்றும் இந்த சவ்வுப் படலத்தை தாக்கி, சைனஸ் பகுதியை தாக்குகிறது. நோய்க்கிருமிகள் தாக்கும்போது சைனஸ் குழியறைகளில் ஏராளமான சளி உருவாகி அந்த குழியறையை காற்று சென்று வெளியேற வழியின்றி அடைத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சைனஸ் குழிகளின் சுவற்றில் ஏற்படும் அழுத்தத்தால் வீக்கம் ஏற்படும், அப்போது அது முகம் சார்ந்த பகுதிகளில் கடுமையான வலியை உருவாக்கும். பொதுவாக, இது போல் சைனஸ் குழியறைகளில் ஏற்படும் நோய்த் தொற்று மற்றும் வலியை “சைனஸ் பாதிப்பு“ என்கிறோம்.

    அறிகுறிகள்


    சைனஸ் பகுதியில் ஏற்படும் திடீர் பாதிப்பை “அக்யூட் பாக்டீரியல் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் நீண்ட நாட்களாக காணப்படும் பாதிப்பை “க்ரோனிக் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் பிரிக்கிறோம். இதில், திடீர் சைனஸ் பாதிப்பு 4 வாரங்கள் வரை நீடிக்கும். நாள்பட்ட பாதிப்பில் முகத்தில் வலி, கண் எரிச்சல், சைனஸ் அறை இருக்கும் முகத்தின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம், மூக்கடைப்பு, சளி ஒழுகுதல், காதுவலி, காதுகளில் அழுத்தம் உள்பட சில அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையானது 12 வாரங்கள் வரை நீடிக்கலாம். சிலருக்கு நாள்பட்ட சைனஸ் பாதிப்பில் நோய் மங்கியது போல் காணப்படும். ஆனால், தலைபாரம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு வாயில் துர்நாற்றம், தொண்டையில் தொடர்ந்து சளி இறங்குதல் போன்றவையும் காணப்படுகின்றன.

    சிகிச்சை முறை

    ஒருவருக்கு சைனஸ் பாதிப்பு அக்யூட் ரைனோசைனசைட்டிஸ் என்ற திடீர் சைனஸ் பாதிப்பில் காணப்படும் தலைவலி, மூக்கடைப்பு, கண்ணைச் சுற்றி வலி போன்ற அறிகுறிகளுக்கு நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து மாத்திரைகள் மற்றும் மூக்கடைப்பை நீக்கும் ஸ்பிரே ஆகியவை தரப்பட்டு நோயின் தீவிரம் தணிக்கப்படுகிறது.



    இதுவே, க்ரானிக் ரைனோசைனசைட்டிஸ் என்ற நாள்பட்ட சைனஸ் பிரச்சினைக்கு சைனஸ் அறைகளை அடைத்துள்ள சளியை நீக்கி சுத்தப்படுத்த எளிய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சைனஸ் பாதிப்பை பொறுத்தமட்டில் நோய்க்கிருமிகள் எந்த அளவு மூக்கு மற்றும் சைனஸ் பகுதியை பாதித்துள்ளன என்பதை கண்டறிய டயாக்னாஸ்டிக் நாசல் என்டாஸ்கோபி பரிசோதனையும், சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டு சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

    நோய் தீவிரம்

    பொதுவாக, சைனஸ் பாதிப்பை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மூக்கில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை “நாசல் பாலிப்ஸ்“ என்கிறோம். இந்த சதை வளர்ச்சி தொடர்ந்து மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மூக்கின் மேல் பகுதியில் ஏற்படும் இந்த சதை வளர்ச்சியால் நாளடைவில் இங்கு காணப்படும் நோய்த்தொற்றுகள் மூளைக்கு பரவி அங்கு சீழ் பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    இதேபோல், கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைப்படலம் மட்டுமே காணப்படுகிறது. இந்த நோய்க்கிருமிகள் தீவிரமடையும் போது இந்த திரையையும் தாண்டி நோய்க்கிருமிகள் கண்ணை பாதிக்கிறது. இதனால் மூக்கும் கண்களும் இணையும் இடத்தை ஒட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு கண்களை ஒட்டிய பகுதிகளில் சீழ் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், நாள்பட்ட சைனஸ் பாதிப்பால் மூக்கு மற்றும் கண்களுக்கு இடையில் காணப்படும் சிறிய மெல்லிய எலும்பையும் தாக்கி அரிமானத்தை ஏற்படுத்துகிறது.

    தடுப்பு முறை

    இன்றைக்கு குழந்தைகளிடத்தில் கூட சைனஸ் பாதிப்பு அறிகுறிகளை காண முடிகிறது. சைனஸ் பாதிப்பில் கிருமிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். சத்தான மற்றும் பருவ நிலைக்கு தகுந்த உணவுகள், உடற்பயிற்சி, உணர்ச்சி வசப்படாத மனநிலை, சுத்தமான சுற்றுப்புறம் ஆகியவை உடலை செம்மையாக வைத்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் சிறிய பாதிப்புகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது பல சிக்கலான பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்க்கும்.

    கண்ணப்பன்
    Next Story
    ×