search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவை ரசிக்கவும் ருசிக்கவும் வைக்கும் ‘புட் ஆர்ட்’
    X

    உணவை ரசிக்கவும் ருசிக்கவும் வைக்கும் ‘புட் ஆர்ட்’

    உணவு மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டும் விதத்தில் உலகெங்கிலும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது, ‘புட் ஆர்ட்’. இது உணவை அழகுபடுத்தும் அலங்காரக்கலை.
    உணவுகளை வெறுமனே விரல்களால் தொடுவதற்கும், இதயபூர்வமாக தொடு வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதயபூர்வமாக ஒரு உணவோடு ஒன்றிவிட்டு, பின்பு விரல்களால் தொட்டால் அந்த உணவின் மீது ஈர்ப்பு அதிகமாகும். இதயத்தால் விரும்பி, அதன் பின்பு அந்த உணவைத் தொடவேண்டும் என்றால், அது அழகாக தோன்றவேண்டும். அந்த அழகைத்தான் ‘புட் ஆர்ட்’ தருகிறது.

    உணவு மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டும் விதத்தில் உலகெங்கிலும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது, ‘புட் ஆர்ட்’. இது உணவை அழகுபடுத்தும் அலங்காரக்கலை. அழகு என்பது உலகில் உள்ள அனைத்துக்கும் தேவை. உணவுக்கும் அது தேவை. அலங்காரம் இல்லாத எதுவும் மக்களை ஈர்ப்பதில்லை.

    சர்வதேச அளவில் தலைசிறந்த ஓட்டல்களில் முதலில் இந்த ‘புட் ஆர்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களையும், ஆண்களையும் அழகுபடுத்த தேர்ச்சிபெற்ற அழகுக்கலை நிபுணர்கள் இருப்பதுபோல், உணவினை அழகுப் படுத்தவும் தேர்ச்சி பெற்றவர்கள் பிரபலமான ஓட்டல்களில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பெருமளவு சம்பளமும் வழங்கப்படுகிறது. அவர்கள் உணவுகளை தயாரிக்கும் ஷெப் களுடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட உணவை அழகாக வடிவமைக்கிறார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உணவை நோக்கி ஈர்க்கிறார்கள்.

    ‘உணவுக்கு ஆரோக்கியமும், ருசியும்தானே தேவை! அதற்கு அழகு தேவையா?’ என்ற கேள்வி எழலாம். ஆனால் பார்வைக்கு அழகாக இருந்தால்தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். உணவுக்கு ஐம்புலன்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி உண்டு. உணவு கண்களை கவர்ந்திழுத்து, அதை பார்க்கத் தூண்ட வேண்டும். தூண்டினால்தான் மனது அதில் லயிக்கும். அடுத்து மணம், நாசியை தொட்டு வருடி அதன் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து நாக்கில் உமிழ்நீர் சுரந்து சுவைக்கத் தூண்டும். தொட்டுப்பார்த்தால் அது பரவசத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட சூழலில் அந்த உணவின் சிறப்பை கேட்கவும் செய்தால், ‘இந்த உணவை சுவைத்தால்தான் என் ஆசை தீரும்’ என்ற எல்லைக்கு போய்விடுவோம். அதை ருசித்து சாப்பிடுவோம்.

    இப்படி பார்த்தல், கேட்டல், நுகருதல், உணருதல், ருசித்தல் என்ற ஐந்து நிலைகளுக்கும் அடிப்படையான ஆரம்பப்புள்ளியாக இருப்பது அழகுதான். அதனால்தான் உலக அளவில் உணவுத்துறையில் ‘புட் ஆர்ட்’ என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது. அது உணவுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.



    நாம் உணவை எடுத்து சாப்பிடுவதற்கு பெரும்பாலும் கை விரல்களைத்தான் பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினர் கரண்டி களைத்தான் கைகளால் பிடிக்கிறார்கள். உணவுகளை அவர்களது விரல்கள் தொடுவதில்லை. உலோக கரண்டிகள்தான் தொடுகின்றன. இதனால் உணவைத் தொடும் இதமான உணர்வு அவர் களுக்கு கிடைப்பதில்லை. மட்டுமின்றி சில உணவுகளை ஒன்றுடன் ஒன்றாக கலந்து பிசைந்து சாப்பிட்டால்தான் முழு சுவை கிடைக்கும். அப்படிப்பட்ட கலவை சுகத்தையும் கரண்டிகளால் முழுமையாகத்தர முடியாது. அதனால் உணவு மூலமான முழு இன்பத்தையும் பெற விரல்களை பயன்படுத்தி அள்ளி எடுத்துதான் சாப்பிடவேண்டும்.

    புட் ஆர்ட்டின் பெருமையை நம்மால் நமது குழந்தைகள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் உணர முடியும். வீட்டில், நெய் சேர்த்து மெலிதாக மொறுமொறுப்பான தோசை சுட்டு குழந்தைகளுக்கு தாய் கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். அதே தோசையை சுட்டு அழகான ஒரு பிளேட்டில் தொப்பி போன்று சுருட்டிவைத்து, அதன் அருகில் கலர் கலரான மூன்று வகை சட்னியும், இன்னொரு கப்பில் சாம்பாருமாக எடுத்து வந்தால், குழந்தைக்கு அதை சாப்பிட ஆர்வம் வந்து விடும். இப்படி அழகாக்குவதுதான் புட் ஆர்ட். உணவு பரிமாறும் பிளேட், உணவின் வடிவம், உணவின் நிறம், அதில் செய்யப்படும் இணைப்புகள், அலங்காரம் எல்லாவற்றையும் ‘புட் ஆர்ட்’ நேர்த்தியாக்குகிறது.

    பெரும்பாலான உணவுகளுக்கு இப்போது கிரீம், சாஸ் போன்றவை கூடுதல் சுவைக்காக வழங்கப்படுகிறது. பொதுவாக இதனை ஒரு கிண்ணத்திலோ, பாட்டிலிலோ வழங்குவார்கள். தற்போது இவைகளை ஒரு சிறிய பந்துக்குள் அடைத்து முட்டைபோல் உணவுத் தட்டுகளில் வைக்கிறார்கள். அதனை முள் கரண்டியால் லேசாக குத்தி உடைக்கும்போது பல வண்ணங்களில் அவை உள்ளே இருந்து வெளியே வரும். குழந்தைகள் இதை ரசிப்பதோடு, சுவைக்கவும் செய்கிறார்கள். பெரிய பிளேட்டில் சிறிதளவு உணவை சிறப்பாக கலைநயத்தோடு அலங்கரித்து சாப்பிட வழங்குவது இப்போது சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் கலர்புல்லாக பலரையும் சாலட் வகைகள் கவர்கின்றன. அதில் பல வண்ண காய்கறிகளை பயன்படுத்தி அழகு சேர்க்கிறார்கள்.

    ‘வெஜிடபிள் கார்விங்’ இப்போது சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கிறது. ஒலிம்பிக் போன்று அதற்கும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குகிறார்கள். இந்த கலை, புட் ஆர்ட்டுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. வெஜிடபிள் கார்விங் கற்றவர்கள் காய்கறி மற்றும் பழங்களை நிறங்களுக்கு தக்கபடி ஒன்றோடு ஒன்றாக அற்புதமாக இணைத்து பயன்படுத்துவார்கள். அதோடு அவைகளை விரும்பிய வண்ணம் அழகுற செதுக்கவும் செய்வார்கள். கற்பனைக்கு எட்டாத விதத்தில் அற்புதமான உருவங்களை அவர்கள் உருவாக்குவார்கள். இந்த கலையின் அடிப் படையை தாய்மார்கள் ஓரளவு கற்று வைத்துக்கொண்டால், தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் எல்லா உணவுகளையும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் அழகுபடுத்தி வழங்கலாம். குழந்தைகளும் அதை பார்த்து ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள்.



    குழந்தைகள் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை என்று நிறைய தாய்மார்கள் வருத்தம் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு புட் ஆர்ட் மூலம் சாதத்தின் மீது ஆர்வத்தை உருவாக்கலாம். ஆரஞ்சு நிறம் கொண்ட கேரட், பச்சை நிறம்கொண்ட கீரை, சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட், பர்பிள் நிறம்கொண்ட குடை மிளகாய் போன்றவைகளை சேர்த்து தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிடுங்கள். பின்பு அவைகளை விரும்பும் வடிவத்தில் நறுக்கி வெந்த சாதத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அந்த பலவண்ண சாதத்தை அவர்கள் விரும்பி உண்பார்கள். இப்படி ஒவ்வொரு உணவையும் ‘புட் ஆர்ட்’ மூலம் அழகுபடுத்தி, குழந்தைகளுக்கு வழங்குவது அவர்களிடம் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

    ‘நூடுல்ஸ்’ சில் கூட புட் ஆர்ட் கலையை அற்புதமாக பயன்படுத்தி குழந்தைகளை கவர்ந்து சாப்பிட வைக்கலாம். நூடுல்ஸ்சில் புட் ஆர்ட் மூலம் சிங்கம் உருவாக்குவதாக இருந்தால், அதற்கு நூடுல்ஸ், நவதானிய பிரெட், உலர்ந்த கருப்பு திராட்சைகள், பாலாடைக்கட்டி, சிவப்பு குடைமிளகாய், வெள்ளரிக்காய் துண்டுகள், கேரட் துண்டுகள், கிவி பழத்துண்டுகள் போன்றவை தேவை. நூடுல்ஸை சிங்கத்தின் தலையாக்கி, ரொட்டியை உடலாக்கி, காது-மூக்கு-வாய் போன்ற பகுதிகளுக்கு பாலாடைக்கட்டியை நறுக்கி வைக்கவேண்டும்.

    கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வெட்டி வைத்து, கருவிழிக்கு திராட்சையை செருகவேண்டும். உதடு மற்றும் மீசைக்கு குடை மிளகாய் மற்றும் கேரட் துண்டுகளை குச்சிபோல் நறுக்கி செதுக்கி வைத்தால் உங்கள் குழந்தைக்கு பிடித்தமான சிங்கக்குட்டி நூடுல்ஸ் உருவாகிவிடும். அதனை ஒரு பிளேட்டில் வைத்து சிங்கக்குட்டியை சுற்றி கிவி பழத்துண்டுகளாலும், குடைமிளகாய் துண்டுகளாலும் அலங்கரிக்கலாம். இதில் காய்கறிகள், பழங்கள், ரொட்டி போன்றவை சேருவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவாகவும் இது மாறிவிடுகிறது.

    உலகில் அனைத்துக்கும் அழகுதேவை. உணவுக்கும் அது முக்கிய தேவை. உணவின் அழகை ரசித்தால்தான் அதனை முழுமையாக ருசிக்க முடியும். ரசித்து, ருசித்து, சத்தான உணவை சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும். ‘புட் ஆர்ட்’ உணவு மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. அதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

    கட்டுரை: முனைவர் ஜெ.தேவதாஸ்,

    உணவியல் எழுத்தாளர், சென்னை.
    Next Story
    ×