search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இடுப்பின் எலும்புகளுக்கு வலிமை தரும் சசாங்காசனம்
    X

    இடுப்பின் எலும்புகளுக்கு வலிமை தரும் சசாங்காசனம்

    இந்த ஆசனம் செய்து வந்தால் இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது இந்த ஆசனம்.
    பெயர் விளக்கம்:- ‘சசாங்க’ என்றால் சந்திரன் என்று பொருள். இந்த ஆசனம் வளர்பிறை சந்திரன் போல இருப்பதால் சசாங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை:- வஜ்ராசனத்தில் உட்காரவும். மூச்சை உள்ளுக்குள் இழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். முதுகு, தலை, கைகள் நேராக இருக்கட்டும். மூச்சை வெளியே விட்டு இடுப்பிலிருந்து முன் குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைத்து சிறிது முன் நகர்த்தி முழங்கால்களுக்கு முன்பு தலையை கொண்டு வந்து நெற்றியை தரையில் பதிக்கவும். முழங்கைகளிலிருந்து கை விரல் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரையில் பதிந்திருக்கட்டும். மார்பு, வயிறு தொடைகளின் மேல் படிந்திருக்கட்டும்.

    இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 10 முதல் 30 வினாடி நிலைத் திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கைகளை உயர்த்தி கைகளை கீழே இறக்கி வஜ்ராசனம் செய்யவும். இது சசாங்கா சனத்தின் ஒரு சுற்று பயிற்சியாகிறது. மேல்கண்ட முறைப்படி 3 முதல் 5 சுற்று பயிற்சி செய்யலாம்.



    கவனம் செலுத்த வேண்டிய இடம்:- அடிவயிறு, தொடை மற்றும் மூச்சின் மீதும், சுவாதிஷ்டானம் அல்லது விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு:- தொந்தி வயிறு உள்ளவர்கள் இந்த பயிற்சியில் முன் வளையும் போது நெற்றி தரையை தொடாது. அப்படி தொட முயலும்போது பிருஷ்டபாகம் மேலே எழும் பிருஷ்ட பாகத்தை மேலே தூக்கி இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. பிருஷ்ட பாகம் குதிகால்கள் மேலே இருக்கும் நிலையிலேயே முடிந்த அளவு முன் வளைந்து பயிற்சி செய்ய வேண்டும்.

    தடைகுறிப்பு:- உயர் ரத்த அழுத்தம், இடம் பெயர்ந்த முதுகு டிஸ்க், தலை சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்:- இடுப்பின் எலும்புகள், தசைகள், நரம்புகள் வலுப்பெறும். அட்ரீனல் சுரப்பி நன்கு செயல்படும். கோபம் கட்டுப்பாட்டில் இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைகளை நீக்கி ஆரோக்கியமாக இருக்கச் செய்கிறது. வயிற்றிலுள்ள உறுப்புக்களும், சுரப்பிகளும் சீராக இயங்க ஊக்குவிக்கிறது. பெண்களின் இடுப்பெலும்பு நன்கு வளர்ச்சியடைய உதவுகிறது. சுவாச கோளாறுகளுக்கு பயனுள்ளது.

    Next Story
    ×