search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கியது

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடிமர மண்டபம் வந்தடைந்தார். காலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 6 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    பின்னர் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறுகிறது.
    Next Story
    ×