search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குமாரசாமி கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    குமாரசாமி கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    குமாரசாமி கோவிலில் திருக்கல்யாணம்: குறவர் படுகளத்துடன் நடந்தது

    குமாரசாமி கோவிலில் திருக்கல்யாணம், குறவர் படுகளத்துடன் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தக்கலை அருகே குமாரகோவிலில் உள்ள வேளிமலை குமாரசாமி கோவிலில் முருகன்-வள்ளி திருக்கல்யாண விழா 24-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. நேற்று முருக பெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மலை மேல் அமர்ந்திருக்கும் கல்யாண மண்டப விநாயகருக்கு கணபதி ஹோமமும், அபிஷேக ஆராதனையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் முருகன் கோவிலை அடுத்த வேளிமலையில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். அதன்பிறகு பகலில் மலையிலிருந்து முருகபெருமான் வள்ளியுடன் பூப்பல்லக்கில் கோவிலுக்குள் எழுந்தருளினார்.

    அப்போது வள்ளியை முருக பெருமான் திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளியின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் முருக பெருமானை வில், அம்பு, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் முற்றுகையிட்டு போர் புரிவது போன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முருகன் வள்ளியின் உறவினர்களுடன் போரிட்டபடி மலையில் இருந்து கீழே இறங்கி வருவதும், இறுதியில் குறவர்கள் முருக பெருமானிடம் சரணடையும், புகழ்பெற்ற குறவர் படுகளம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதன்பிறகு வள்ளியின் உறவினர்கள் முருக பெருமானின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வள்ளியுடன், முருக பெருமான் மேற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பிறகு வள்ளிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நடந்தது. வள்ளிக்கு சீதனமாக பட்டுச் சேலை, சீப்பு, வளையல், குங்குமம், திருமாங்கல்யம் போன்றவற்றை நார்ப்பெட்டியில் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு இரவு 7 மணிக்கு கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளிக்கு முருக பெருமான் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தினைமாவு, பஞ்சாமிர்தம், லட்டு, மாங்கல்யம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை திருவிழாக்குழு மற்றும் குறவன் சமுதாயத்தினர் செய்து இருந்தனர்.

    இரவு 10 மணிக்கு சாமி வெள்ளிக்குதிரையிலும், அம்மன் பூப்பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இதில் திருவிழாக்குழு நிர்வாகிகள் பிரசாத், மாதவன் பிள்ளை, சுனில்குமார், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், கிருஷ்ணன் வகையை சேர்ந்த ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×