search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா
    X

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றங்கரையில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கிராம வழிபாட்டு தலமாகவும், சக்தி தலமாகவும் போற்றப்படுவதுடன், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 10-ந் தேதி முதல் காப்பு கட்டுதலும், 17-ந் தேதி 2-ம் காப்பு கட்டுதலும் நடந்தது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைய மகாமாரியம்மனை வேண்டி கொள்வர். பின்னர் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவரை போல் படுத்து கொள்வர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவரது உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வருவார்கள். இதுவே பாடைக்காவடி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நோயில் இருந்து குணமடைந்தவர்கள் பச்சை ஓலை படுக்கையுடன் பச்சை மூங்கில் பாடையில் இறந்தவர் போல் படுத்து கொண்டனர். இறந்தவரை எடுத்து செல்லும் இறுதி சடங்கு போன்று தீச்சட்டியுடன் அனைத்து சடங்குகளை செய்து அந்த பாடையை அவருடைய உறவினர்கள் 4 பேர் தூக்கி கொண்டு கோவிலை 3 முறை வலம் வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வழங்கிய பால் மற்றும் அபிஷேக பொருட்களால் அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் சாமி தரிசனம் செய்தார்.

    மாலையில் அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. செம்மறி ஆடு ஊர்வலமாக பிடித்து வரப்பட்டது. பின்னர் கோவிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டிருந்த செடில் மரத்தில் ஆட்டை ஏற்றி 3 முறை வலம் வந்து செடில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவசம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் ஆண்கள், பெண்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்திட சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலின் உட்புறம், வெளிபுறங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டது. பேரூராட்சி சார்பில் அனைத்து பகுதிகளில் குப்பைகள் அகற்றி தடையில்லா குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் செய்து இருந்தனர். ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேலு தலைமையில், மருத்துவ குழுவினர், தீயணைப்பு நிலைய வாகனத்துடன் தீயணைப்பு வீரர்கள் கோவிலின் முன்புறம் முகாம் அமைத்து தயார் நிலையில் இருந்தனர்.

    தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின்படி, திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு துரை ஆலோசனைபடி, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், திருவாரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோசப், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி, சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் 300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்சார துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கிளை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, திருவையாறு, கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து வலங்கைமானுக்கு 48 மணி நேரத்திற்கு மேலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு 7 மணியளவில் 1 மணி நேரத்திற்கு சிறப்பு வான வேடிக்கைகள் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×