search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதையும் படத்தில் காணலாம்.
    X
    புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி திருக்கல்யாணம் நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்வதையும் படத்தில் காணலாம்.

    புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் திருக்கல்யாண விழா

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் பங்குனி விழாவையொட்டி திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை புஷ்பவனேசுவரர்-சவுந்திர நாயகிஅம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாண விழா நடைபெற்றது. முன்னதாக புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கண்ணூஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்பு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். அப்போது மண்டபத்திற்கு அழகிய மணவாள ரெங்கநாத பெருமாள் சுவாமி எழுந்தருளினார். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மதியம் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பிரசாதமாக வழங்கப்பட்ட புதிய மஞ்சள் கயிற்றை, திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பெண்கள் கழுத்தில் அணிந்துகொண்டனர். விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் புஷ்பவனேசுரவர் மற்றும் சவுந்திரநாயகி அம்மன் தனித்தனி தேரில் நகரில் வீதி உலா வருகின்றனர். ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    நேற்று திருப்புவனம் பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய அளவிலான சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 
    Next Story
    ×