search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் 7 அம்மன்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
    X
    திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் 7 அம்மன்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    டி.கல்லுப்பட்டி அருகே நடைபெற்ற ஏழூர் திருவிழா

    டி.கல்லுப்பட்டி அருகே ஏழு கிராம மக்கள் சார்பில் சமூக ஒற்றுமைக்காக நடைபெற்ற ஏழூர் சப்பர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    டி.கல்லுப்பட்டி பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது, ஏழூர் திருவிழா. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலாம்பட்டி, அம்மாபட்டி, காடனேரி, கிளான்குளம், சத்திரபட்டி ஆகிய 7 கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் ஒருசேர திருவிழா கொண்டாடப்படும். 600 ஆண்டுகளுக்கு மேலாக இந்த திருவிழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் நடைபெறும் இத்திருவிழா கடந்த 3 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி பகுதியில் இருந்து நவாப்புகளின் படையெடுப்பு காரணமாக ஒரு மூதாட்டி தனது 6 பெண் குழந்தைகளுடன் தெற்கு பகுதி நோக்கி வந்துள்ளார். அவர்கள் வந்த பின்னர்தான் டி.கல்லுப்பட்டியில் மழை பெய்து விவசாயம் செழித்ததாக வரலாறு கூறுகிறது. இதனால் டி.கல்லுப்பட்டி மக்கள் அவர்களை அன்போடு கவனித்து வந்தனர்.

    பின்னர் வளர்ந்த அந்த 6 பெண்களுக்கும் நாயக்கர் திருமணம் செய்து வைக்க முயன்றபோது, அப்பெண்கள் தங்களை தெய்வ குழந்தைகள் என்றும், ஆதிபராசக்தியின் வடிவம் ஆகிவிடுவோம் என்றும் கூறி மறைந்தனர். இந்த ஐதீகத்தின்படி தேவன்குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும், டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலாம்பட்டியில் மகாலட்சுமியாகவும், அம்மாபட்டியில் பைரவியாகவும், காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளான்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சவுபாக்கியவதியாகவும் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சப்பர பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மாபட்டியை தவிர பிற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களது ஊர் சப்பரத்தை வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு செய்தனர். ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை இருந்தது.

    கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அந்தந்த கிராம மக்கள் தலைச்சுமையாகவே அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். கிளாங்குளம், சத்திரப்பட்டி சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்துகொண்டு வரப்பட்டது. அம்மாபட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்து பெண்கள் சாமி கும்பிட்டனர்.

    பின்னர் விழா முடிந்து ஒவ்வொரு கிராமத்தினரும் தங்களது ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமங்களுக்கு திரும்பினர். பொதுவாக சப்பரங்கள் மற்றும் தேர்களை வடம்பிடித்து அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்களது தலைச்சுமையாக தூக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த சப்பர திருவிழாவையொட்டி டி.கல்லுப்பட்டி உள்பட 7 கிராமங்களை தவிர்த்து மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சூரக்குமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    Next Story
    ×