search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா நாளை தொடங்குகிறது

    மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படும் வைகாசி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
    மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவிலில் மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படும் வைகாசி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது. 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    11 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழாவில் 23-ந் தேதி திருமறைநாதர், வேதநாயகிஅம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் மேலூருக்கு இரட்டை மாட்டுவண்டியில் எழுந்தருளுகிறார். 10 கிலோ மீட்டர் தூரம் பவனி வரும் அவருக்கு வழி நெடுகிலும் மேலூரிலும் 30 -க்கும் மேற்பட்ட மண்டகப்படிகள் அமைத்து பக்தர்கள் வணங்குவார்கள்.

    மேலூரில் தற்போது சிவன்கோவில் உள்ள இடத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு பெரிய மரம் மட்டுமே இருந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சிவனடியார் ஒருவர் மிகுந்த பக்தியுடன் வசித்து மக்களுக்கு ஆன்மிக சேவை செய்துவந்துள்ளார். அப்போது மேலூரில் பணிபுரிந்த தாசில்தாரும் அந்த சிவனடியாரிடம் வந்து ஆசிபெறும் தீவிர பக்தர் ஆகியுள்ளார்.

    அந்த சிவனடியார் தினமும் திருவாதவூருக்கு மேலூரிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு கோவிலில் திருமறைநாதரை வழிபட்டு வந்த பின்னரே சாப்பிடுவது வழக்கம். நாளடைவில் வயது மூப்பினால் அந்த சிவனடியார் திருவாதவூருக்கு நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மனம் வருந்தி சாப்பிடாமல் இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவரது முன்பு தோன்றிய திருமறைநாதர் அந்த சிவனடியாரிடம் மனம் வருந்தாதே, ஆண்டுதோறும் நானே இங்குவந்து உனக்கும், மக்களுக்கும் அருள்புரிகிறேன் என அவதரித்து அருள்புரிந்தாராம்.

    சிவன் அருள் புரிந்த விவரத்தை அந்த சிவனடியார் மேலூர் தாசில்தாரிடம் கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் புதுமண்டபம் அருகே உள்ள சிவலிங்கத்தை மேலூருக்கு கொண்டுவந்து இங்கு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்யவேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார். மதுரையில் பணிபுரிந்த ஆங்கிலேய கலெக்டரிடம் அனுமதிபெற்று அந்த சிவலிங்கத்தை மேலூருக்கு தாசில்தார் கொண்டுவந்து கோவில் கட்டப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

    அதனால் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மேலூருக்கு திருமறைநாதர் எழுந்தருளும் மாங்கொட்டை விழாவில் மேலூர் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது . அதற்கென்று மேலூரின் நுழைவு வாயில் சாலைகரையானூரணி அருகே தாசில்தார் மண்டகப்படி உள்ளது. இங்கு திருமறைநாதர் வந்து காத்திருந்து தாசில்தாருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கமாகும்.

    அதன் பின்னர் மேலூரில் மண்டகப்படிகளில் சாமி எழுந்தருளி இரவில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அன்று சிவன்கோவிலில் தங்கலாகி விடிய விடிய அருள்புரியும் திருமறைநாதர் 24-ந் தேதியன்று காலை திருவாதவூர் புறப்பாடாகிறார். 26-ந் தேதி காலை 10.30 மணி அளவில் திருக்கல்யாணமும் மறுநாள் காலை தேரோட்டமும் நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து.கண்ணன் மற்றும் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். 
    Next Story
    ×