search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தனது நான்கு சீடர்களுடன் சங்குசுவாமிகள்
    X
    தனது நான்கு சீடர்களுடன் சங்குசுவாமிகள்

    ஊர் செழிக்க ஊரணியை உருவாக்கிய சங்கு சுவாமி

    சங்கு சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களுக்கு ‘மனம் போல் வாழ்வு’ என்று கூறி அருளாசி வழங்குவார். அதன்படியே பலர் வாழ்ந்தனர்.
    சங்கு சுவாமிகளின் தவ பலனை அறியாத பலரும், அவரை வேலை வாங்கி வந்தனர். ஈசனது உத்தரவின் பேரில் சிங்கம்பட்டி ஜமீனின் நோய் தீர்த்ததும், சங்கு சுவாமியை பலரும் பயபக்தியோடு பார்க்கத் தொடங்கினர். பழைய காலங்களைப் போல அவரை யாரும் வேலை வாங்கவில்லை. இதனால் சங்குசுவாமிக்கு தனிமை கிடைத்தது. அந்த நேரங்களில் கயிலாயநாதர் ஆலயத்துக்குள் அமர்ந்து மணிக்கணக்கில் தியானம் செய்யத் தொடங்கினார். சில நேரங்களில் அதிகாலையில் தொடங்கும் தியானம், நள்ளிரவு வரை நீடித்தது.

    சங்கு சுவாமிகள் வாழ்ந்த பசுவந்தனை கிராமம், எட்டயபுரம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது. ஒரு நாள் எட்டயபுரம் மகாராஜா ராஜஜெகவீர முத்துக்குமர எட்டப்ப நாயக்கர், பசுவந்தனை கயிலாயநாதரை வழிபட வந்தார். எல்லோரும் அவரை வணங்கி வரவேற்றனர். அப்போது நந்தவனத்தில் நின்று கைலாயநாதருக்கு சூட்டுவதற்காக பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தார் சங்கு சுவாமிகள். அவர் ராஜாவை கண்டுகொள்ளவில்லை. பற்றற்ற ஞானிக்கு ராஜாவாக இருந்தால் என்ன? ஆண்டியாக இருந்தால் என்ன?. எல்லோரும் சமம் தானே.

    அதைக்கண்ட அந்த ராஜா, ‘யார் அவன்?. எனக்கு மரியாதை தராமல் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறான்?’ என்று கேட்டார்.

    அங்கு கூடியிருந்த அனைவரும் ‘அவன் ஒரு பித்தன்' என்றனர்.

    ‘அவனை இங்கே கூட்டி வாருங்கள்’ என்றார் ராஜா. சங்கு சுவாமிகள், ராஜா முன்பாக அழைத்து வரப்பட்டார்.

    அவரைப் பார்த்து ‘நீ பித்தனா அல்லது எத்தனா?' என்று வினவினார் ராஜா.

    அதற்கு பதில் கூறிய சங்குச்சுவாமிகள் ‘நான் அத்தன்' என்றார்.

    அத்தன் என்றால் என்ன என்று புரியாமல் விழித்த மன்னனுக்கு, மேலும் கோபம் உண்டாது. ஆனால் மக்கள் அரசனை திசை திருப்பினர். மேலும் சங்கு சுவாமியின் தந்தைக்கும், சகோதரனுக்கும் ஏற்பட்ட கதிதான் அனைவருக்கும் தெரியுமே.

    அங்கிருந்தவர்கள் ‘மன்னா! அவன் ஒரு கருநாக்கன். சொன்னது பலிக்கும்' என்று கூறினர். சுதாகரித்துக்கொண்ட மன்னர் அங்கிருந்து நகர்ந்தார்.

    இருப்பினும் அரண்மனைக்குச் சென்றதும், ‘அத்தன் என்றால் என்ன?’ என்று மந்திரிகளிடம் கேட்டார்.

    அவர்களோ, ‘தந்தை என்றும், இறைவன் என்றும் இரு பொருள்படும்’ என்றனர்.

    அப்படியென்றால் சங்கு சுவாமி சாதரணமானவர் அல்ல, பெரிய மகான் என்பதைப் புரிந்து கொண்ட ராஜா, உடனடியாக ஒரு பல்லக்கை அனுப்பி, சங்கு சுவாமியை அழைத்து வரச் சொன்னார்.

    பசுவந்தனை வந்த பல்லக்கு தூக்கிகள், சங்கு சுவாமியை அரண்மனைக்கு அழைத்தனர். அவரும் சிரித்தபடியே பல்லக்கில் ஏறி அமர்ந்தார். பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை தூக்கிக் கொண்டு அரண்மனை நோக்கி புறப்பட்டனர். அரண்மனைக்கு முன்பாக பல்லக்கை இறக்கி வைத்து விட்டு, திரை சீலையை விலக்கிப் பார்த்தபோது, அங்கே சங்குசுவாமிகள் இல்லை. மாயமாகியிருந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் தன் தவறை உணர்ந்தார் மன்னன். ‘சங்கு சுவாமி மிகப்பெரிய சித்தர், அவரை நாமே நேரில் சென்று அழைக்க வேண்டும்’ என்றபடி பசுவந்தனைக்குப் புறப்பட்டார்.

    பசுவந்தனையில் குளக்கரையில் அமர்ந்திருந்த சங்கு சுவாமியை வணங்கிய மன்னன், அரண்மனைக்கு வருகை தரும்படி வரவேற்றார்.

    அதற்கு சங்குசுவாமிகள், ‘காலம் வரும்போது வருவேன்’ என்று கூறினார். அதன்படியே தான் ஜீவசமாதி அடையும் முன்பாக ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.

    ஒரு முறை பசுவந்தனையிலும் அதன் சுற்றுப்புற ஊர்களிலும் மழைப்பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. மனிதர்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகளும் குடிக்கத் தண்ணீரின்றி அவதிப்பட்டனர்.

    அந்தச் சமயத்தில் சங்குச் சுவாமிகள், எந்த ஊரில் எந்த இடத்தில் பூமியைத் தொடுகிறாரோ, அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் பீறிட்டு வந்தது. இது போல் தோண்டப்பட்ட இடங்களை ‘சங்குச் சுவாமி ஊரணி' என்றே ஊர் மக்கள் அழைத்தனர். வடக்குப் பொம்மையாபுரம், எப்போதும் வென்றான் சாலை, ஓட்டப்பிடாரம் சாலை, ராமநாதபுரம் மாவட்டம் நத்தக்காடு கிராமம், அதன் அருகில் உள்ள குமரெட்டாபுரம், தூத்துக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம், பசுவந்தனை கையிலாய நாதர் ஆலயம் அருகில் உள்ள யாகக் கிணறு போன்றவை சுவாமி வழிகாட்டுதலில் தோண்டப்பட்ட ஊரணிகளே ஆகும்.

    நத்தக்காடு ஊரணி அமைத்தபோது சங்குசுவாமியை பாராட்டுவதற்காக அந்த ஊர் தலைவர் வந்தார். அப்போது ஊர் தலைவரின் மகள் பேசும் திறனற்று இருப்பதை உணர்ந்து, அந்தப் பெண்ணை பேச வைத்தார். அதுமட்டுமின்றி தூத்துக்குடி வீரபாண்டிய புரத்தில் சிற்றரசராக வாழ்ந்த காமாட்சி தம்பதிக்கு, சோம யாகம் நடத்தி குழந்தைப்பேறு அருளினார்.


    நத்தன்காடு சங்குசுவாமியின் ஜீவசமாதி

    பசுவந்தனை கீழ ரதவீதியில் கட்டப்பட்ட முருகன் கோவிலில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. அங்கு வந்த சுவாமிகள், உணவின்றி பல நாட்கள் தவம் இருந்தார். இதனால் கோவில் நிர்வாகத்தினர் மனதுக்குள் பயந்தனர். உணவின்றி இருப்பதால், அவருக்கு ஏதாவது ஆகி, கும்பாபிஷேகம் நிரந்தரமாக தடைபட்டு விடுமோ என்பது தான் அவர்களது எண்ணம்.

    ஆனால் சில நாட்களில் தவம் கலைந்து எழுந்த சங்கு சுவாமி, ‘மனம் போல் வாழ்வு’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதன் பிறகும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் தடைப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் சங்கு சுவாமி தவம் செய்வது போல ஒரு சிலையை செய்து, கோவிலில் நிறுவிய பிறகே கும்பாபிஷேகம் நிகழ்ந்துள்ளது. தற்போதும் அந்த சிலை முருகன் கோவிலில் உள்ளது. இந்த சிலை வடிவை வைத்தே, சங்குசுவாமியின் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சுவாமிக்கு நத்தக்காடு சங்குச் சுவாமிகள், கோவிந்தபுரம் சங்குச்சுவாமிகள், மாவில்பட்டி சங்குச் சுவாமிகள், சிங்கிலிப்பட்டி சங்குச் சுவாமிகள் என 4 சீடர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருக்குமே தனித்தனி வரலாறுகள் உள்ளன.

    1830-ம் ஆண்டு ஆவணி மாதம் அசுபதி நட்சத்திரத்தில் தன் சீடர்களை அழைத்தார், சங்கு சுவாமி. ‘நான் ஜீவஜோதி அடையப்போகிறேன்' என்றார். பக்தர்கள் அதிர்ந்தனர். கண்ணீர் மல்க நின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் வித்தியாசமான சின் முத்திரையை காட்டி பத்மாசனத்தில் அமர்ந்து தன் மூச்சை நிறுத்தினார். அதன் மீது சிவலிங்கம் அமைத்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள்.

    பசுவந்தனை பஸ் நிலையத்தின் அருகே உள்ள இந்த ஆலயத்திற்கான இடங்களை எட்டயபுரம் ஜமீன்தார் வழங்கியுள்ளார். இந்த கோவிலில் தமிழ் மாத கடைசி வியாழக்கிழமைகளில் அபிஷேகமும், அன்தானமும் நடைபெறும். அன்னதான பூஜை செய்பவர் களுக்கு நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இவரது சன்னிதிக்கு அருகிலேயே, அவரது சீடர் நத்தக்காடு சங்குச்சுவாமிகளும் ஜீவசமாதி அடைந்துள்ளார்.

    மனம் போல் வாழ்வு

    சங்கு சுவாமிகள் தன்னை நாடி வருபவர்களுக்கு ‘மனம் போல் வாழ்வு’ என்று கூறி அருளாசி வழங்குவார். அதன்படியே பலர் வாழ்ந்தனர். நன்மை நினைப்பவர்களுக்கு நன்மையும், தீமை நினைப்பவர்களுக்கு தீமையும் கிடைக்கும் என்பதை தாரக மந்திரமாக தனது பக்தர்களுக்கு கூறியவர், சங்குசுவாமிகள்.

    பசுவந்தனையில் செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய கஞ்சனாக வாழ்ந்து வந்தார். அவர் அரண்மனைக்கு எண்ணெய் பிழிந்து கொடுப்பவர். தன்னுடைய எண்ணெய் செக்கில் மிஞ்சிய பிண்ணாக்கை யாராவது சிறுவர்கள் எடுத்து உண்டால் கூட அவர்களுக்குப் பிரம்படி விழும். செக்கிழுக்கும் மாடு களுக்குக்கூட உணவழிக்காத கஞ்சன் அந்த செல்வந்தர். தனது செல்வத்தால் எதையும் சாதிக்கலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை.

    பலரும் சங்கு சுவாமி களைப் பற்றிக் கூற, செல்வந்தர் குழந்தை வரம் கேட்டு அவரிடம் வந்தார். அவரைப் பார்த்த சங்கு சுவாமி, ‘மனம் போல் வாழ்வு’ என்றார்.

    ஆனால் அந்தச் செல்வந்தரோ, ‘இவர் என்ன சுவாமி.. இவருக்கு வரம் கொடுக்கத் தெரியவில்லை. என்னிடம் பணம் இருக்கிறது, நான் பார்த்துக் கொள் கிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    சில நாட்களிலேயே உணவில்லாததால், செக்கிழுத்த மாடுகள் இறந்து விட்டன. அதனால் செக்கு ஆடாமல் நின்றது. சம்பளம் போதவில்லை என்று வேலையாட்களும் நின்று விட்டனர். அந்த செல்வந்தரின் செல்வம் கரைந்தது. விரைவிலேயே அவர் ஏழையானார். அதன்பிறகே சங்கு சுவாமியின் கூற்றை அவர் உணர்ந்தார்.
    Next Story
    ×