search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி.
    X
    நம்பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த காட்சி.

    நம்பெருமாள்-தாயார் இன்று சேர்த்தி சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ங்குனி தேர் திருவிழாவின் 9-ம்நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தங்க கருட வாகனம், சேஷ வாகனம், கற்பக விருட்ச வாகனங்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் திருகொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    திருவிழாவின் 8-ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைந்தார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு கோரதம் அருகே வையாளி கண்டருளினார்.

    திருவிழாவின் 9-ம்நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும் தாயாரும் ஒருசேர இருப்பார்கள். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம். இதனால் இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவார்கள்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையில் இருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியே காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேருகிறார். 12.30 மணியிலிருந்து 1.45 மணிவரை முதல் ஏகாந்தம் நடைபெறுகிறது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேருகிறார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைகிறார்.

    பகல் 3 மணிமுதல் இரவு 10.30 மணி வரை பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கோடை காலம் என்பதால் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தாயார் சன்னதி முன் மண்டபத்தில் இருந்து சேர்த்தி மண்டபம் வரை 60 டன் திறன் கொண்ட குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 5 டன் திறன் கொண்ட குளிர்சாதன எந்திரங்கள் 12 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஒரு இடத்தில் மிகப் பெரிய ஏர் கூலரும், தாயார் சன்னதி முன் மண்டபத்தில் சுமார் 30 மின் விசிறிகளும் பொருத்தப்படுகின்றன. பக்தர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டில்களும், பிரசாதமாக மஞ்சள், கற்கண்டு வழங்கவும் கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் சேர்த்தி சேவையை காண்பதற்கு வசதியாக தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட எல்.இ.டி திரையில் நம்பெருமாள்-தாயார் சேர்த்திசேவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை (சனிக் கிழமை) நடைபெறுகிறது. 1-ந் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு, அறங்காவலர்கள் கே.என்.சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×