search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாளை ஜெயந்தி தினம்: கண்கண்ட தெய்வம் சீரடி சாய்பாபா
    X

    நாளை ஜெயந்தி தினம்: கண்கண்ட தெய்வம் சீரடி சாய்பாபா

    நாம் எப்போதும் சீரடி சாய்பாபாவை நினைத்துக் கொண்டே இருப்போம். சாய்பாபாவை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார்.
    நம்பிக்கை, பொறுமை - இந்த இரண்டும் இருந்தால், உலகத்தில் எந்த ஒரு விஷயத்திலும் இனிப்பான வெற்றியை, நீடித்த சுகமான பலன்களை நாம் நிச்சயம் பெற்று அனுபவிக்க முடியும்.

    சீரடி சாய்பாபாவை ஆத்மார்த்தமாக- முழுமையாக உணர்ந்த ஒவ்வொரு பக்தனுக்கும் இந்த உண்மை தெரியும். சாய்பாபாவை நம்பி ஏமாந்தவர் என்று சர்வ நிச்சயமாக இந்த உலகில் யாரையும் சொல்லவே முடியாது.

    நம்பிக்கை இருந்தால், பொறுமை இருந்தால், நிச்சயம் சாய்பாபாவின் அருள் பார்வையில் இருந்து ஒருவர் தப்பவே முடியாது. தனது பக்தர்கள் ஒவ்வொருவரையும் சிட்டுக்குருவி காலில் கயிற்றைக் கட்டி இழுப்பது போல, அவர் இழுத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் எப்படி அவரிடம் இருந்து நாம் தப்ப முடியும்?

    சீரடி சாய்பாபா மகாசமாதி அடைந்து இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 150 ஆண்டுகளைக் கடந்தும் அவரது அற்புதங்கள் பேசப்படுகிறது என்றால் அவரது அளவற்ற சக்தியை நாம் புரிந்து கொள்ளலாம். சீரடியில் வாழ்ந்த சுமார் 60 ஆண்டு காலத்தில் அவர் தினம், தினம் அற்புதங்கள் செய்தார். ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டினார்.

    அந்த அற்புதங்களும் ஆச்சரியங்களும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. “ஓம் சாய், ஸ்ரீசாய், ஜெய, ஜெய சாய்” என்ற அவரது மூல மந்திரத்தை உச்சரிக்கும் ஒவ்வொருவரது வாழ்விலும் சீரடி சாய்பாபா செய்துள்ள அற்புதங்கள் ஏராளம், ஏராளம்....

    பொதுவாக இறை அவதாரமாக, மண்ணில் இறங்கி, மனிதராக வாழ்ந்த மகான்கள் தங்கள் வாழ்நாளுக்குப் பிறகு அற்புதங்கள் நிகழ்த்துவது இல்லை. அப்படியே அற்புதங்கள் நிகழ்ந்தாலும் அவை பக்தர்களை பக்குவப்படுத்தி பண்படுத்துவதில்லை.

    ஆனால் சீரடி சாய்பாபா இன்றும் அற்புதங்களும், ஆச்சரியங்களும் செய்து கொண்டிருக்கிறார். தன்னை நம்பி சீரடி மண்ணில் காலடி எடுத்து வைப்பவர்களின் வாழ்வில் அவர் மறுமலர்ச்சியை ஏற்படுத்த தவறியதே இல்லை. இந்த விஷயத்தில்தான் மற்ற இறை அவதாரங்களில் இருந்து சீரடி சாய்பாபா மாறுபட்டு நிற்கிறார்.

    அதனால்தான் இன்று உலகம் முழுவதும் சீரடி சாய்பாபா ஆலயங்கள் பெருகி வருகின்றன. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட சீரடி சாய்பாபாவுக்கு மிகக்குறைவான ஆலயங்களே இருந்தன.

    கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல ஆயிரம் ஆலயங்கள் உருவாகியுள்ளன. இது எந்த ஒரு இறை அவதாரத்துக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

    குறிப்பாக தமிழ்நாட்டில், சீரடி சாய்பாபாவுக்கு பிரமிக்கத்தக்க வகையில் ஆலயங்கள் தோன்றி இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் கூட இன்று சாய்பாபாவுக்கு ஆலயம் உருவாகி இருக்கிறது.

    இதில் சிறப்பு என்னவென்றால் சீரடி தலத்தில் சாய்பாபாவுக்கு எப்படி ஆரத்தி காண்பித்து வழிபாடுகள் செய்கிறார்களோ, அதே மாதிரி ஒவ்வொரு சாய்பாபா தலத்திலும் வழிபாடு, பூஜை முறைகள் நடக்கிறது. சீரடியில் நடப்பது போன்றே சாவடி ஊர்வலம் கூட நடத்துகிறார்கள்.

    இதன் மூலம் சாய்பாபா வீற்றிருக்கும் ஒவ்வொரு தலத்திலும் அவரது அருள் அலைகள் நிரம்பி இருப்பதாக மக்களிடையே அசைக்க முடியாத நமபிக்கை நிலவுகிறது. இந்த நம்பிக்கைதான் இன்று சீரடி சாய்பாபா வழிபாட்டை பிரமிக்கத்தக்க உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது.

    சாய்பாபா ஆலயங்களைப் பொருத்தவரை நீங்கள் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். அதாவது சீரடியில் எப்படி மிகப்பெரிய அரங்கில் சாய்பாபா வீற்றிருக்கிறாரோ, அதே போன்றுதான் மற்ற ஆலய அமைப்புகளும், சிலை வடிவமைப்புகளும் அமைந்துள்ளன.

    பாபா ஆலயங்களின் மூலஸ்தானத்தில் பால் போன்ற தூய வெண்மை நிற பளிங்குக் கல்லில் பாபாவை பார்த்ததுமே நம் மனம் இலவம் பஞ்சாக லேசாகி விடும். ஓளி வீசும் அவர் பார்வைபட்டதுமே நம் உடம்பு புதிய கதிர்வீச்சுகளால் தாக்கப்பட்டது போன்ற உணர்வை அனுபவிக்க முடியும். மனம் பரவசமாகி விடும்.

    பாடலுடன் ஆரத்தியைக் காணும்போது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடும். அந்த சமயத்தில் உணமையான பாபா பக்தன், ஒவ்வொருவனும் ஆன்ம சுகத்தை உணர்வான். இந்த அற்புதம் இன்றும் ஒவ்வொரு பாபா தலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

    சீரடி சாய்பாபாவை இன்று கோடிக்கணக்கான மக்கள் மொய்ப்பது ஏன்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். சிலர் பொருளுக்காக பாபாவை நாடுவார்கள். அவர்களது வேண்டுதல் எல்லாம் லௌசீக, இல்லற வாழ்வை சுகமாக நடத்த வேண்டும் என்ற ரீதியில் இருக்கும்.

    சிலர் பாபாவை அருள் வேண்டி நாடுவார்கள். அவர்களது நோக்கம் எல்லாம், பாபாவின் காலடி நிழலில் இண்டற கலந்துவிட வேண்டும் என்பதாக இருக்கும்.
    இப்படி அருள் வேணடி பாபாவை நாடுபவர்களை விட பொருள் வேண்டி நாடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். ஆனால் பாபாவோ, அருள் கேட்டாலும் சரி, பொருள் கேட்டாலும் சரி அள்ளி, அள்ளி கொடுக்கத் தயாராக உள்ளார். அள்ளி, அளளிக் கொடுத்தும் வருகிறார்.

    சீரடியில் வாழ்ந்த 60 ஆண்டுகளில் அவர் தினமும் அருள்மொழிகளை வெளியிட்டார். அந்த அருள்மொழிகள்தான் இன்று சாய்பாபா பக்தர்களை வழி நடத்துகின்றன.

    “நான் எங்கும் இருக்கிறேன். ஒட்டு மொத்த உலகமும் என்னோடு இருக்கிறது”



     *****

    என்னிடம் நம்பிக்கை வைத்தவர்களை
    நான் கைவிடுவது இல்லை.

    *****

    என்னை நீங்கள் எந்திரத் தனமாக ஏற்கக் கூடாது.
    முழு மனதுடன் ஏற்க வேண்டும்.

    *****

    என்னை வழிபடுபவர்கள் உலகியல் வாழ்வில்
    நாட்டம் கொள்வதில்லை.
    அவர்களுக்கு மெய் உணர்வை ஊட்டுவேன்.

    *****

    அனைத்து உயிரினங்களிலும் என்னைக்
    காண்பவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்.
    நான் அவற்றின் உருவில் சுற்றித் திரிகிறேன்.

    *****

    உங்களின் எண்ணங்களிலும், செயலிலும் என்னையே
    மையமாகக் கொள்ளுங்கள்.
    உங்கள் குறிக்கோளை அடைவீர்கள்.

    *****
    என்னை உண்மையான மனக் கிளர்ச்சியுடன்
    தியானிப்பவர்களுக்கு என்னை நான் புலப்படுத்துவேன்.
    எனது ஸ்தூல சரீரத்தை அவருக்கு காட்டுவதோடு
    ஆன்மிகத்தில் அனேக உச்சங்களுக்கும் அவரை
    நான் கொண்டு செல்வேன்.

    *****

    என்னை நேசிப்பதன் மூலம்
    ஒருவர் அடைகிற ஆனந்தத்தை
    வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

    *****

    ஒவ்வொரு உயிரும் என்
    பேரொளியின் சிறு துளி.

    *****

    பிரபஞ்சத்தின் தாயாகவும், பிரமனாகவும் என்னைப்
    புரிந்து கொண்டவர்கள், பரமசாந்தியையும்,
    முக்தியையும் பெறுகிறார்கள்.

    *****

    என் கருவூலம் நிரம்பி வழிகிறது
    யார் எதை விரும்பினாலும் என்னால்
    கொடுக்க முடியும். அதைப் பெறும்
    தகுதி அவருக்கு உண்டா என்பதை
    மட்டுமே நான் பார்க்கிறேன்.

    *****

    இந்த மசூதிப் படியில் கால் வைப்பவர்கள்
    உலகப் பற்றை விடுவார்கள். எல்லா
    வற்றையும் பெறுவார்கள்.

    *****

    நான் இங்கிருந்து போனாலும்
    என் வார்த்தைகள் வாழும்.
    எனது எலும்புகள் சமாதியில் இருந்தாலும்
    உங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.
    அது உங்களுடன் உரையாடும்
    தன்னை ஒப்படைத்து கொண்டவர்களுக்கு
    அது பதில் அளிக்கும்.



    - இப்படி சாய்பாபா சொன்ன அருள்மொழிகள் லட்சக்கணக்கில் உள்ளன. அவை சாய் பக்தர்களை புடம் போட்ட தங்கமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
    சாய்பாபா கடினமான மந்திரங்களையோ, வேதங்களையோ, உபதேசங்களையோ சொன்னது இல்லை. தன்னை முழுமையாக நம்பச் சொன்னார். அதுதான் மந்திரம். அதை மனதார கடைபிடித்தவர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடந்தபடி உள்ளன.

    சாய்பாபா விரதம் இருந்து உடம்பை வருத்தி தன்னை வழிபட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். என்றாலும் சமீப காலமாக வியாழக்கிழமைகளில் பாபா வழிபாடு தனித்துவம் பெற்று புகழ் அடைந்துள்ளது.

    வாரம் முழுவதும் பொழுது போக்குகளில் மூழ்கி கிடப்பவர்கள். வியாழக்கிழமை வந்ததும் அடக்கம்-ஒடுக்கமாக பாபா முன்பு போய் நின்று விடுகிறார்கள். வாரம் முழுவதும் ஓடி, ஓடி உழைப்பவர்கள் வியாழக்கிழமை என்றதும் ஆரத்தி பாடல் பாடி பாபாவை வழிபட தவறுவதில்லை. இதனால் வியாழக்கிழமை வழிபாடு தனி சடங்கு போல மாறி வருகிறது. ஆனால் சாய்பாபா தம் வாழ்நாளில் எந்த ஒரு மத சடங்கையும் கடைபிடித்ததே இல்லை. அவர் எந்த ஒரு மதத்துக்குள்ளும் தன்னை குறுக்கிக் கொள்ளவில்லை. நானே கிருஷ்ணன், நானே அல்லா, நானே ஏசு என்றார்.

    அதனால்தான் சீரடி தலம் இன்று அனைத்து மத மக்களும் வழிபடும் ஒப்பற்ற தலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் இனத்தவர்கள், சீக்கியர்கள் என்று எல்லா மத மக்களையும் சீரடியில் காண முடியும்.

    பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் வந்தாலும், மூலஸ்தானத்தில் பாபாவை கண்டதும் அவர்கள் வாய் “சாய் மகராஜீக்கு... ஜே” என்று முழக்கமிட தவறுவதில்லை. “உங்கள் சுமைகளை நான் சுமக்கிறேன்” என்று பாபா அடிக்கடி சொல்வது உண்டு. சீரடி தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தனையும் இந்த வகையில்தான் சாய்பாபா ஆட்கொள்கிறார்.

    அதை மக்கள் அன்றும் உணர்ந்தனர், இன்றும் உணர்கிறார்கள். பாபாவை மக்கள் மகாராஜா என்றனர். மகாராஜாவையும் விட உயர்வாக நடத்தினார்கள். ஆனால் பாபா சீரடியில் பரம ஏழையாகத்தான் வாழ்ந்தார். கிழிந்த உடைகளையே உடுத்தினார். கடைசி வரை சீரடியில் 5 வீடுகளில் அவர் பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டார்.

    அவர் பணம், பொருள் என்று எதையும் சேர்த்து வைக்கவில்லை. தன் பெயரில் மடமோ, பீடமோ உருவாக்கவில்லை. என்றாலும் சீரடியில் அவர் ஏற்றி வைத்த ஜோதி, உலக மக்களுக்கு வழிகாட்டும் வகையில் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அந்த பாதை எது என்று தெரிந்து கொண்டால், பாபாவின் அருளை மிக, மிக எளிதாக பெற முடியும். பெரும்பாலும் சாய்பாபா, ராம விஜயத்தை விரும்பி கேட்பார். 1918-ம் ஆண்டு தனது இறுதிநாள் நெருங்கியபோது கூட அவர் ராம விஜயம் படிக்கச் சொல்லி கேட்டார். ராம நாமத்தை அனைவரும் உச்சரிக்கும்படி செய்தார். ராமருக்கும் அவருக்கும் உள்ள பந்தம் இப்போதுதான் பக்தர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ ராமநவமி தினம்!

    ராமபிரான் இந்த உலகில் அவதரித்த தினம் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராம அவதாரம். இந்த சிறப்பான நாளில்தான், நமது புண்ணிய பூமியில் இன்னொரு இறை அவதாரமும் நிகழ்ந்தது.

    அந்த அவதாரப் புருஷர் வேறு யாருமல்ல.. சீரடி சாய்பாபா!

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அந்த அவதாரத்தை பக்தர்கள் “கண் கண்ட தெய்வம்” என்று போற்றுகிறார்கள்.

    சீரடி சாய்பாபா, யாருக்கு, எப்போது, எங்கு பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது. 1854-ம் ஆண்டு 16 வயது இளைஞனாக அவர் சீரடிக்கு வந்தார். சுமார் 60 ஆண்டுகள் அவர் சீரடியில் இருந்து அருளாட்சி செய்தார்.

    தினம், தினம் அவர் அற்புதங்கள் செய்தார். ஆச்சரியங்களை நிகழ்த்தினார். மக்கள் அவரது சொல்லுக்குக் கட்டுப்பட்டு கிடந்தனர். அவரை கண் கண்ட கடவுளாக வணங்கினார்கள்.

    சிலர் அவர் பிறப்பை அறிய ஆராய்ச்சிகள் செய்தனர். செப்டம்பர் மாதம் பாபா பிறந்து இருக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால் ராமநவமி தினம்தான் சீரடி சாய்பாபாவின் அவதார தினமாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நாளைய தினம் சீரடி சாய் பக்தர்களுக்கு முக்கியமான தினம். நாளை நீங்கள் சாய்பாபாவுடன் இதயப்பூர்வமான சரணாகதியை மேற்கொள்ள வேண்டும்.

    யார் ஒருவர் பாபாவிடம் இதயப்பூர்வமாக சரண் அடைகிறாரோ, அவரது துயரங்கள் விடுபடும். வெறும் உடலை மட்டும் பாபாவிடம் இருத்துவதால் எந்த ஒரு பயனும் கிடையாது. உங்கள் சிந்தனையும் முழுமையாக பாபா பற்றியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுகம் உண்டாகும்.

    இந்த சுகத்தைப் பெற சாய் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்...

    ஆம்.... நம்பிக்கை, பொறுமை இரண்டும் வேண்டும். இந்த இரண்டும் இருந்தால், நாம் எப்போதும் சீரடி சாய்பாபாவை நினைத்துக் கொண்டே இருப்போம். சாய்பாபாவை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி 10 அடி எடுத்து வைப்பார். இத்தகைய கண் கண்ட தெய்வத்தை “சிக்“கென பிடித்துக் கொண்டாலே போதும், வாழ்வில் கரை சேர்ந்து விடலாம்.
    Next Story
    ×