search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈஷா யோகா மையத்தில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா
    X

    ஈஷா யோகா மையத்தில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா

    கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்தில் இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா விடிய விடிய நடந்தது.
    கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 24-வது மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடந்தது.

    கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்ட 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவிற்கு சத்குரு தலைமை தாங்கி மகாயோகா யத்னா விளக்கை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, உதயகுமார்,செல்லூர் ராஜு,கோவை எம்.பி.நாகராஜன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மகா சிவராத்திரி விழாவையொட்டி ஆதியோகி சிலை முன்பு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணிக்கு பல்வேறு இசைக்கருவிகளுடன் மெய்மறக்க செய்யும் இசையுடன் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் லிங்க பைரவி சிலைக்கு ஆரத்தி எடுத்து நடனம் ஆடினார்கள். அதைத் தொடர்ந்து சக்தி மிக்க தியானங்கள், மகா மந்திர உச்சாடனை, மனதை வருடும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுதவிர இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கும் வகையில் துள்ளலான இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    அதில் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம், மற்றும் தலெர் மெஹந்தி, மோகித் சவுகான் மற்றும் சியன் ரொனால்டோ ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மேலும் சந்தோஷ் ஷெட்டி குழுவினர் மற்றும் மணிப்பூர் டிரம்மர்ஸ் வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா இசைக் குழுவினரின் உற்சாகமான இசை தொகுப்புகளும் அரங்கேறின.

    117 தன்னார்வலர்கள் ஆதியோகிக்கு அர்ப்பணிக்கும் மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெற்றது. ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற இந்த மகா சிவராத்திரி விழாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.இரவு 8 மணி அளவில் சத்குரு பேசி முடித்தபின்னர் பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. அதற்கேற்றவாறு பார்வையாளர்கள் மத்தியில் நீண்ட தூரத்துக்கு அமைக்கப்பட்ட மேடையில் நின்றவாறு சத்குரு நடனம் ஆடினார். பார்வையாளர்களும் உற்சாகத்துடன் நடனம் ஆடினார்கள்.

    ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

    முன்னதாக விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மதியம் 2 மணிக்கு கோவை வந்தார். அதன்பின்னர் அவர் கார் மூலம் மதியம் 2.15 மணிக்கு ஈஷா யோகா மையம் புறப்பட்டு சென்றார்.



    முன்னதாக விழாவில் சத்குரு பேசியதாவது:-

    மாசி மாதத்தில் வரக்கூடிய இந்த மகாசிவராத்திரி ஒரு ஆண்டின் மிகப்பெரிய, மிக இருண்ட இரவாக விளங்குகிறது. இந்த கால கட்டத்தில் பூமிக்கு வெவ்வேறு நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இயல்பாகவே சக்தி மேல்நோக்கி போவதற்கான சாத்தியகூறு இந்த மகா சிவராத்திரியன்று இருக்கிறது. யோக பாதையில் சாதனை செய்பவர்களுக்கு இது உகந்த இரவாகும்.ஆனால் எந்தவித யோக சாதனையும் செய்யாதவர்களுக்கும் இந்த இரவு ஒரு அரிய இரவாகும். முதுகு தண்டை இந்த இரவு முழுவதும் நேராக வைத்திருப்பதின் மூலம் 307 நாட்கள் செய்ய வேண்டிய யோக சாதனைகளின் பலனை பெறுவதற்கான வாய்ப்பு இந்த இரவு நமக்கு கொடுக்கிறது.

    அதிலும் குறிப்பாக பூமியின் சில குறிப்பிட்ட இடங்களில் நாம் இருக்கும்போது அதன் பலன் அதிகமாக இருக்கிறது. மகாசிவராத்திரியன்று பூமியின் 11 டிகிரி அட்சரேகையில் இருந்து வடக்கு நோக்கி இருக்க கூடிய பகுதிகள் மிகவும் சக்தி வாய்ந்த பகுதிகளாக கருதப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. இதே போல இந்த ஆதியோகியின் வளாகம் மிக துல்லியமாக 11 டிகிரி அட்சரேகையில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் மைய விலக்கு விசையிலிருந்து சக்தி மேல்நோக்கி செல்வதற்கு மிகச்சரியான இடத்தில் நீங்கள் திரண்டிருக்கிறீர்கள். ஆதியோகி சிலை முன்பு நீங்கள் கூடியிருப்பது மிகவும் விசேஷம்.

    இந்த இரவை பல்வேறு தரப்பினர் வெவ்வேறு விதமாக சொல்கிறார்கள். ஒரு தரப்பினர் மகாசிவராத்திரி இரவை சிவன்-பார்வதியின் திருமண நாளாக கருதுகிறார்கள். எனவே இந்த இரவை நீங்கள் தவற விட்டு விடக்கூடாது. மகா சிவராத்திரியன்று புதிதாக ஒரு வழிபாட்டு முறையை உருவாக்குகிறோமோ, புதிதாக ஒரு மதத்தை உருவாக்குகிறோமோ என்ற கேள்விகளை எழுப்புகிறார்கள். அப்படி எதுவும் கிடையாது. மனித குலம் பெறக்கூடிய அத்தனை சிக்கல்களுக்கும் விஞ்ஞானபூர்வமான தீர்வை அருளக்கூடியவர் ஆதியோகி. இதனால் தான்அந்த இரவை நாம் கொண்டாடுகிறோம்.

    மனிதர்களை மதத்தில் இருந்து பொறுப்பை நோக்கி இட்டு செல்வதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கி வருகிறோம். எல்லாவற்றையும் வெளியில் தேடிக் கொண்டிருக்கிற மனிதன், உள்முகமாக தேடும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். எல்லா சிக்கல்களையும் நாம் உடலின் உள்ளேயிருந்து தான் உருவாக்கி உள்ளோம். எனவே அதற்கான தீர்வும் உங்களுக்குள்ளே தான் இருக்கிறது. எனவே இந்த மகாசிவராத்திரி இரவு வெறுமனே விழித்திருக்கும் இரவாக இல்லாமல் விழிப்புணர்வு மிக்க இரவாக அமைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.
    Next Story
    ×