search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: நற்செயல்
    X

    நோன்பின் மாண்புகள்: நற்செயல்

    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)
    நற்செயல் பற்றிய இஸ்லாத்தின் பட்டியல் நீளமானது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கதிரவன் எழும் ஒவ்வொரு நாளிலும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஒரு அறத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கிடையில் நீதியுடன் நடந்து கொள்வதும் அறமே. ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்குகளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே.

    ஒரு நற்சொல் மொழிவதும் அறமே.தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே. பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே. (நூல்:புகாரி, முஸ்லிம்)

    உங்கள் சகோதரனை புன்முறுவலுடன் சந்திப்பதும் ஓர் அறமே. (முஸ்லிம்)

    முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். (புகாரி)

    இரண்டு கோத்திரத்தாருக்கிடையே தகராறு என்ற செய்தி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. நபியவர்கள் சமாதானம் செய்து வைப்பதற்காகத் தமது தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். சமாதானப் பேச்சு வார்த்தையில் சற்று நேரம் தாமதமாகி விடவே உரிய நேரத்தில் தொழுகையில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் தாமதமாகத் தொழுகையில் கலந்துகொண்டார்கள். (புகாரி)

    (சமாதானத்தில் ஈடுபடும் வேளைகளில் தொழுகையில் கலந்துகொள்ள தாமதமானாலும் பெருமானார் அதைப் பொருட்படுத்தவில்லை.)நேர்மையான முறையில் வணிகம் புரிவதும், நீதிமிக்க ஆட்சி செலுத்துவதும் இறை அருளுக்குரியவை என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    எனவே வாழ்வின் அனைத்துத் துறைகளையும் நற்செயல் தழுவி நிற்கின்றது. அது வழிபாடுகளோடு முடிந்துவிடுவதல்ல என்பதையே மேற்கூறிய நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    நற்செயல் புரிபவர் உளத்தூய்மையோடு செய்தால் மட்டுமே அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். பகட்டுக்காகவும், விளம்பரத்திற்காகவும், பிறரிடம் நன்றி, கூலி, பாராட்டு, கைம்மாறு ஆகியவற்றை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களை இறைவன் ஏற்பதில்லை.

    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

    “மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.”(76:8-9)

    நன்மைகளை விரிவாகச் செய்வோம். நல்ல உள்ளத்துடன் செய்வோம். இறைத் திருப்தியைப் பெறுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×