search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பும் ஒழுக்கமும்
    X

    நோன்பும் ஒழுக்கமும்

    பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.
    இறைவனை அஞ்சுகின்ற, ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்குவதே நோன்பின் நோக்கம். நோன்பு எப்படி ஒழுக்கமுள்ள மனிதனாக ஒருவரை உருவாக்கும் என்ற கேள்வி எழுகின்றது.

    “பசித்திரு, தனித்திரு, விழித்திரு” இது ஆன்மிகத்திற்கான பயிற்சிகளாகக் கருதப்படுகின்றது. ரமலானின் இம்மூன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது. பகலில் பசித்திருத்தல், இரவில் விழித்திருந்து, தனித்திருந்து பிரார்த்தனை, வழிபாடுகள், திருக்குர் ஆன் ஓதுதல் என்பன ரமலானில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

    ‘‘ஒன்றை இழந்தால் ஒன்றை பெறலாம்” என்பார்கள். ரமலானின் பகலில் உணவு, நீர், இச்சை ஆகியவற்றை துறப்பதால் ஆன்மிக உணர்வு கூர்மை பெறுகின்றன. பார்வை தெரியாதவர்களுக்கு தொடு உணர்ச்சியும், கேட்கும் திறனும் அதிகப்படுவதுபோல் உணவு, இச்சைகளைத் துறப்பவர்களுக்கு இறை சிந்தனை, பக்தி, உளத்தூய்மை ஏற்படுகின்றது.

    நோன்பின்போது தீமைகளைச் செய்வதை நோன்பாளிகள் தவிர்க்கின்றனர். நோன்பின்போது பயிற்சியாகப் பெற்றதை பின்னர் அவர்களின் பழக்கமான, இயல்பாக மாறிவிடுகிறது.

    நோன்பு எவருக்கும் வெளிப்படையாகவே தெரியாமல் செய்யும் வணக்கமாகும். தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை பிறர் அறியும் வாய்ப்பு உண்டு. ஆனால் நோன்பின்போது இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வே மறைவிடத்திலும் உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் அவனை தடுக்கிறது. எனவே இம்மாதத்தில் இறை உணர்வு இன்னும் வலுப்பெறுகிறது. பகட்டுக்காக அன்றி படைத்தவனின் திருப்திக்காகவே ஒரு செயலை செய்ய பயிற்சி அளிக்கின்றது. உளத்தூய்மை தருகின்றது.

    நோன்பு பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தருகிறது. பசி, தாகத்தை அடக்குதல், சினத்தை கட்டுப்படுத்துதல், நாவை பேணுதல், உணர்ச்சிவசப்படாதிருத்தல் ஆகியவை நோன்பின் மூலம் கிட்டுகின்றன.

    இவ்வாறு பயிற்சி பெற்றவர் வாழ்க்கையில் நெருக்கடிகளையும், சிரமங்களையும் எளிதாகத் தாங்கிக் கொள்ளும் பண்பைப் பெறுகிறார். ஒரு மாதத்திற்கு பிறகும் இப்பண்புகள் தொடருமானால் முழுமையான மனிதராக அவர் மாறி விடுவார். எனவே நோன்பு என்பது வெறும் பட்டினியும், தாகமும் அல்ல. ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதற்கான பயிற்சித் திட்டம். இத்தகைய பயிற்சியைப் பெறாதவர் நோன்பின் முழுப்பலனையும், நிறைவான கூலியையும் பெறமாட்டார். பயிற்சி பெறாத  நோன்பாளிகளைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள்

    “எத்தனையோ நோன்பாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. (நோன்பிற்கான கூலி கிட்டுவதில்லை.)” (தாரமி). எனவே நோன்பாளிகள் ஒழுக்கப் பயிற்சி பெறுவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்.
    Next Story
    ×