search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாமியர்கள் புனித ரமதான் கரீம்
    X

    இஸ்லாமியர்கள் புனித ரமதான் கரீம்

    நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமலான் வாழ்த்துகள்.
    உலகம் முழுவதும் பரந்து வாழும்‌ இசுலாமியர்கள் புனித ரமதான் மாதம் வந்து விட்டால் சூரியன் உதிப்பதற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை தங்களைப் படைத்த ஏக இறைவனுக்காக பசி, தாகம் மறந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதே நோன்பாகும்.

    "நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது" என்கிறது திருக்குர்ஆன் (2:183-185).

    இறைநம்பிக்கையுடையவர்கள் இறைவனுக்காகத் தமது பசியையும் தாகத்தையும் மறந்தால் மட்டும் போதுமா என்றால் இல்லை. அவர்கள் தம் உணர்வுகளையும் இச்சைகளையும் கட்டுப்படுத்திக் கொள்வதே நோன்பின் சிறப்பு.

    கட்டுப்பாடு என்பது என்ன? வாய்ப்புகள் இருந்தும் வசதிகளிருந்தும் நம் தேவைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வது என்பது சுலபமான கட்டுப்பாடா? ரமதான் மாத நோன்பு வாய், எண்ணம், உடல், மனது என்று எல்லாவிதமான சுயக் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கியவை. இந்த ஒரு மாத கால கட்டுப்பாடே வாழ்வியல் பயிற்சி. இந்தப் பயிற்சியைத் தொடர வேண்டுமென்பதற்காகவே இந்த ரமதான் நோன்பு இஸ்லாத்தின் மூன்றாவது தூணாகக் கடமையாக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் இறையச்சம் விளைந்தால் தவறான பாதையில் செல்லவோ, சிறு தவறுகள் செய்யவோ மனம் யோசிக்கச் செய்யும் என்பதற்கான ஏற்பாடு. தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்பதற்கு ரமதான் நோன்பு மிகப் பொருத்தம்.

    ரமதான் என்பது ரமிதா அல்லது அர்ரமாத் அல்லது ரம்தா என்ற அரபி வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். பொருள் சுட்டெரிக்கும் அனல், உலர்ந்த தன்மை, கொதிக்கும் மணல் என்று பொருட்படுவதைப் பசியாலும் தாகத்தாலும் நாம் உள்ளெரிவதையோ, உலகத்திலேயே பாவத்தை எரிக்கும் முயற்சியென்றோ தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

    ‘நோன்பைப் பாவங்களின் கேடயம்’ என்றும் ‘யாருடனும் சண்டை போடக் கூடாது. ‘யாரேனும் வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்தாலும் “நான் நோன்பாளி” என்று சொல்லி ஒதுங்கி இருக்க வேண்டும்’ என்றும், ‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ என்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) சொல்லியதிலிருந்து சாப்பிடாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பல்ல என்பது திண்ணம்.

    'நோன்பு இருப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா? காலையில் எழுந்து சாப்பிடத்தானே செய்கிறீர்கள்' என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. ரமதான் உணவிற்கான மாதமல்ல. காலையில் தூக்கத்தைவிட்டு எழுந்து நான்கு மணிக்கு முன்பாக ஏதாவது சாப்பிடுவது பருகுவது மிகவும் கடினமான காரியம் என்று நோன்பிருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதே போல் மாலையில் நோன்பு திறந்த பிறகு அதிகமாக உட்கொள்ளவும் இயலாது என்பதே உண்மை.

    திருக்குர்ஆன் அருளப்பட்டது புனித ரமதான் மாதத்தில்தான். இப்புனித மாதத்தில் இறைவனை அதிகம் நினைத்து தியானிக்க வேண்டும். நமக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட திருக்குர்ஆனை ஓத வேண்டும். பாவமன்னிப்புக் கோர வேண்டும்.

    இந்த மாதத்தில் அதிகமாகத் தர்மம் செய்ய வேண்டும். அதனாலேயே நோன்பு நாட்கள் முடிந்து வரும் பெருநாளை 'ஈத் ஃபித்ர்' என்கிறோம் அதாவது ஈகைத்திருநாள். பெருநாள் அன்று பள்ளிக்குத் தொழுகைக்கு முன்பாகக் கட்டாயத் தர்மத்தை நிறைவேற்றிய பிறகே ஈத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளில் நோன்பிருக்கக் கூடாது. காலையில் பசியாறியப் பிறகே பள்ளிக்குத் தொழச் செல்ல வேண்டும்.

    நோன்பென்றால் என்ன என்பதை முழுமையாக உணர்ந்து அதனை நோற்பதே இறைவனுக்கு நாம் செலுத்தும் நல்வழிபாடாக இருக்க முடியும். ரமதான் வாழ்த்துகள்.

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×