search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாமை எளிமையாக்கச் சொன்ன எம்பெருமானார்
    X

    இஸ்லாமை எளிமையாக்கச் சொன்ன எம்பெருமானார்

    முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜத்துல் வதாவுக்கு அதாவது இறுதி ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கா அனுப்பினார்கள்.
    முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜத்துல் வதாவுக்கு அதாவது இறுதி ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் ஹஜ்ஜை தலைமையேற்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை மக்கா அனுப்பினார்கள். அந்த வருடம் துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், நபி(ஸல்) அவர்கள் அபூபகர் (ரலி) அவர்களை, “எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது.

    கஅபாவை நிர்வாணமாக வலம்வரக் கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள். ஏனெனில் மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே கஅபாவை வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர. ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃபு செய்வதற்காக ஆடை கொடுப்பார். இந்த ஹும்ஸ் கிளையார் யாருக்கு ஆடை கொடுக்க வில்லையோ அவர் நிர்வாணமாக வலம் வருவார்.

    மேலும், மக்கள் அரஃபாவிலிருந்து திரும்பி விடுவார்கள். ஆனால், குறைஷிகளோ எல்லாம் முடிந்த பின்பு முஸ்தலிஃபாவிலிருந்துதான் திரும்புவார்கள். 'மேலும் மற்றவர்கள் திரும்புகிற (அரஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்' என்ற திருக்குர்ஆனின் வசனம் குறைஷிகளுக்காகவே அருளப்பட்டது.

    பின்னர் நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை அனுப்பி, திருக்குர்ஆனின் 9-வது அத்தியாயத்தில் ஒப்பந்த முறிவு பற்றிக் கூறப்படும் முதல் இருபது வசனங்களை அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அதில் “ஒப்பந்தங்கள் அனைத்தும் இன்றுடன் முடிந்து விட்டன” என்பதை அறிவித்தார்கள். மேலும், நான்கு மாதங்கள் தவணையளித்தார்கள். ஒப்பந்தமில்லாதவர்களுக்கும் நான்கு மாத தவணை கொடுத்தார்கள். உடன்படிக்கை செய்தவர்கள் அதனை மீறாமலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பிறருக்கு உதவி செய்யாமலும் இருந்தால் அவர்களது ஒப்பந்தக் காலம் முடியும் வரை தவணையளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இதெல்லாம் அரபுலகம் முழுவதும் சிலை வணக்கம் ஒழிந்தது என்ற முகமாக அறிவிக்கப்பட்டது.

    முஸ்லிம்களுக்கு மக்காவில் கிடைத்த வெற்றி, மூளையை மழுங்கச் செய்த சிலை வணக்கக் கலாச்சாரத்தை வேரோடு கலைத்து விட்டது. இவ்வெற்றியால் பொய்யிலிருந்து மெய்யை, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை மக்கள் பிரித்து அறிந்து கொண்டனர். அவர்களின் சந்தேகங்கள் நீங்கின. எனவே, இஸ்லாமை ஏற்றுக் கொள்ள விரைந்தனர்.

    மக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைந்தனர். தபூக் போர் முடிந்து நபி (ஸல்) ஹஜ்ஜுக்காக மக்கா பயணமான போது முஸ்லிம்களின் ஒரு கடலே அவர்களுடன் இருந்தது. அதாவது தஸ்பீஹ், தக்பீர், தஹ்லீல் முழக்கங்கள் விண்ணை முட்ட ஓர் இலட்சம் அல்லது ஓர் இலட்சத்து நாற்பதாயிரம் நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களைப் புடை சூழச் சென்றனர்.

    அதேபோல் நபி (ஸல்) தபூக் போரிலிருந்து மதீனா வந்த பின் யமன் நாட்டு ஹிம்யர் பகுதி அரசர்களின் கடிதம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அரசர்களான அல்ஹாரிஸ் இப்னு அப்து குலால், நுஅய்ம் இப்னு அப்து குலால், நுஃமான் போன்றோர் மாலிக் இப்னு முர்ரா ரஹாவியை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, தாங்கள் இணைவைத்தலையும் இணைவைப்பவர்களையும் விட்டு விலகி இஸ்லாமை ஏற்றோம் என்று தெரிவித்தனர்.

    நபி (ஸல்) அந்த அரசர்களின் இஸ்லாமிய வருகையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் முஸ்லிம்களின் சலுகைகள், அவர்களின் கடமைகள் முதலியவற்றை விவரித்தார்கள். மேலும், முஆத் இப்னு ஜபல் (ரலி) தலைமையில் தம் தோழர்களை மார்க்கக் கல்விப் பணிக்காக அம்மக்களிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். அபூமூஸா அஷ்அயை யமனின் கீழ்புறத்தில் உள்ள ஜுபைத், மஃரப், ஜமா, ஸால் ஆகிய பகுதிகளுக்குப் பொறுப்பாளியாக்கினார்கள். “நீங்கள் இருவரும் இஸ்லாமை மக்களுக்கு எளிமையாக்குங்கள் கடினமாக்காதீர்கள். நற்செய்தி நவிலுங்கள் வெறுப்பூட்டாதீர்கள். இணக்கமாக இருங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என நபி (ஸல்) அழகிய அறிவுரை கூறியனுப்பினார்கள்.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 2:25:1622, 1:8:369, 2:25:1665, திருக்குர்ஆன் 2:199, அர்ரஹீக் அல்மக்தூம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×