search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை தொடங்குகிறது

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயமும் ஒன்று. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக பூண்டிமாதா பேராலயத்தின் முகப்பில் இருந்து நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலம் கொடிமரத்தின் அருகில் வந்தவுடன் குடந்தை மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து மரியா-திருத்தூதர்களின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலியை பிஷப் அந்தோனிசாமி நிறைவேற்றுகிறார். திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் எடிசன்ராஜ், அமலதாஸ், ஆன்மிக தந்தை அருளானந்தம் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.



    திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு தேர்பவனி மற்றும் திருப்பலி நடைபெறும். 14-ந்தேதி(திங்கட்கிழமை) காலை பூண்டி பேராலயத்தின் பங்குத்தந்தையர்களாக பணியாற்றி மறைந்த லூர்துசேவியர், ராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நடக்கிறது.

    மாலையில் மரியா அருளின் ஊற்று என்ற தலைப்பில் குடந்தை பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுவார். திருப்பலிக்கு பின்னர் வண்ண மின்விளக்கு மற்றும் மல்லிகை மலர் அலங்காரத்தில் பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர்பவனியை குடந்தை பிஷப் தொடங்கி வைக்கிறார். தேர்பவனி நிறைவடைந்தவுடன் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர்், துணை அதிபர் தியான மைய இயக்குனர் மற்றம் பங்குகுழுவினர் செய்து உள்ளனர். 
    Next Story
    ×