search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாகரிகங்கள் அழிந்ததைப்போல், திருமணமும் இல்லாமல் போகலாம் - கவிஞர் வைரமுத்து
    X

    நாகரிகங்கள் அழிந்ததைப்போல், திருமணமும் இல்லாமல் போகலாம் - கவிஞர் வைரமுத்து

    “நாகரிகம் அழிந்ததைப்போல் காலப்போக்கில் திருமணமே இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்று கவிஞர் வைரமுத்து கூறினார். #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh
    ‘பொற்காலம்,’ ‘தவமாய் தவமிருந்து’ உள்பட பல தரமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர், சேரன். சில வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கியிருக்கும் படம், ‘திருமணம்.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

    விழா முகப்பை திருமண மண்டபத்தின் நுழைவுவாயில் போல் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரித்து இருந்தார்கள். முகப்பில் இருந்து நுழைவு வாயில் வரையிலான நடைபாதையை தென்னங்கீற்றுகளால் அழகுபடுத்தி இருந்தார்கள். விழா அரங்கத்திற்குள் நுழைந்ததும் பாரம்பரியமான தவில்-நாதஸ்வர கச்சேரி பரவசப்படுத்தியது. படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் பட்டு வேட்டி-சட்டை, பட்டு சேலை அணிந்திருந்தார்கள். விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் திருமண வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது.

    விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    “இயக்குனர் சேரன் நுட்பமான பார்வை உடையவர். கதையை எழுதுகிறவர் அல்ல, செதுக்குகிறவர். சேரனுக்கு நான் எழுதிய பாட்டுக்கே ஒரு வரலாறு உண்டு. ஒரு முறை சிங்கப்பூர் விமான நிலையத்தின் வெளிவட்ட சாலையில் நானும், என் நண்பரும் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தோம். எங்களை கடந்து சென்ற ஒரு பெரியவர், “நீங்கள்தானே வைரமுத்து” என்று கேட்டார். ‘ஆம் என்றேன்’. நீங்கள் எழுதிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, ‘தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன்.



    “நான் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழன். என் பூர்வீகம் எனக்கு தெரியாது. இந்த பாட்டுக்குள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் மண்ணெடுத்திருக்கிறீர்கள். பாட்டை கேட்கிறபோதெல்லாம் இந்த ஊர்களில் ஒன்று என் பூர்வீகமாய் இருக்குமோ என்று அடிக்கடி விரும்பி கேட்கிறேன்” என்றார். அப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல. சிங்கப்பூரின் அன்றைய ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் தான். அவர் மறைந்தபோது, அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

    அப்போது, சிங்கப்பூரின் சீன அமைச்சர் ஒலிபெருக்கியின் முன்னால் வந்தார். “இப்போது, மறைந்த ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒலிபரப்பப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார். உடனே அந்த மேடையில், “தஞ்சாவூரு மண்ணெடுத்து” பாடல் ஒலிபரப்பானது. இப்படி ஒரு வரலாற்று சிறப்பு சேரன் உருவாக்கிய ‘பொற்காலம்’ படத்தில், தேவா இசையில் நான் எழுதிய பாடலுக்கு கிடைத்தது. இந்த ஒரு தடம் போதும். சேரன் இயக்குனராக வந்து சாதித்ததற்கு...

    ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ என்ற படத்தை இப்போது அவர் இயக்கியிருக்கிறார். மனிதகுல வரலாற்றில் திருமணம் என்ற நிறுவனம் மிகவும் புதியது. மனிதகுலம் தனது வசதிக்கு கட்டமைத்துக் கொண்ட பிற்கால நாகரிகம்தான் திருமணம். இந்த நாகரிகம் மாறாது என்று சொல்லமுடியாது. இது மாற்றங்களோடு தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கலாம்; காலப்போக்கில் மறைந்தே போகலாம். பல ஆயிரம் ஆண்டு கொண்ட நாகரிகங்கள் அழிந்ததைப்போல், சில ஆயிரம் ஆண்டுகள் கொண்ட திருமணமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.



    “திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட கோட்டை; வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்லத் துடிக்கிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தத் திரைப்படம் திருமணத்தை திருத்த பார்க்கிறதா? அல்லது திருமணத்தையே நிறுத்த பார்க்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

    இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

    டைரக்டர்கள் பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், மாரி செல்வராஜ், கார்த்திக் தங்கவேல், செழியன், அருண்ராஜா காமராஜ், கோபி நைனார், நடிகைகள் மீனா, பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.  #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh

    Next Story
    ×