search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஸ்வாஜித்"

    • ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 372 பேர் எழுதினர்.
    • இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றிருக்கிறார்கள்.

    சென்னை :

    நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. அந்தவகையில் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களில் கணினி வாயிலாக நடத்தி வருகிறது. இதில் முதன்மைத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.

    அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 24, 25, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1-ந் தேதிகளிலும், கடந்த 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15-ந் தேதிகளிலும் என பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தாள்-1 தேர்வு 2 முறை நடத்தப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்வை எழுத 8 லட்சத்து 60 ஆயிரத்து 64 பேர் விண்ணப்பித்து, 8 லட்சத்து 23 ஆயிரத்து 967 பேர் எழுதினார்கள். இதற்கான முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் நடத்தப்பட்ட ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுத 9 லட்சத்து 31 ஆயிரத்து 334 பேர் விண்ணப்பித்து, 8 லட்சத்து 83 ஆயிரத்து 367 பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதில் 100 சதவீத மதிப்பெண்ணை 43 மாணவ-மாணவிகள் பெற்றிருக்கிறார்கள். முதல் இடத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சிங்கராஜூ வெங்கட் கவுன்டினியாவும், அதற்கு அடுத்தபடியாக கள்ளக்குரி சாய்நாத் ஸ்ரீமந்த் (ஆந்திரா), இஷான் காண்டல்வல் (ராஜஸ்தான்), தேஷாங் பிரதாப் சிங் (உத்தரபிரதேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.கே.விஸ்வாஜித் என்ற மாணவர் 100 சதவீத மதிப்பெண்ணுடன் 24-வது இடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். 2 முறை நடந்த தேர்வுகளில் எதில் சிறந்த மதிப்பெண் பெறப்பட்டிருக்கிறதோ அதை மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

    மேலும், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய பிரிவினர்களுக்கான ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு தாள்-1-க்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் www.nta.ac.in, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இதைத் தொடர்ந்து பி.ஆர்க்., பி.பிளானிங் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதன்மை தாள்-2ஏ, தாள்-2பி தேர்வுக்கான முடிவு தனியாக பின்னர் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

    ×