search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத நோய்"

    வேப்பனப்பள்ளி அருகே வியர்வையாக ரத்தம் சொட்டும் வினோத நோயால் அவதிப்படும் 10 வயது சிறுமிக்கு கிரு‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #KrishnagiriGirl #BloodSweating
    கிரு‌ஷ்ணகிரி:

    கிரு‌ஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி கங்கோஜிகொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஜெகநாதபுரம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமிதேவி. இவர்களது மகள்கள் அர்ச்சனா (வயது 10), தர்ஷிணி(8), பல்லவி(5). இதில், அர்ச்சனா, ஜெகநாதபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த ஜூலை மாதம் முதல் அர்ச்சனாவிற்கு திடீரென மூக்கில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.

    இதனால் அவள் கிரு‌ஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். இதையடுத்து, அடுத்தடுத்து சில நாட்களில் அர்ச்சனாவுக்கு உடலில் வியர்வை சொட்டுவது போல், கண்கள், மூக்கு, காது, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் சொட்டியது. இதைத்தொடர்ந்து, அர்ச்சனாவை பெற்றோர் ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்து பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.

    இந்த பரிசோதனை முடிவில் சிறுமியின் ரத்தத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றனர். இருப்பினும் அர்ச்சனாவிற்கு திடீர் திடீரென உடலில் வியர்வை போல ரத்தம் சொட்டுவதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் கிரு‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், அர்ச்சனாவிற்கு, கிரு‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நலப்பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்து, பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை நாகராஜ் கூறுகையில், அர்ச்சனாவிற்கு உடலில் வியர்வையாக தண்ணீர் வருவது போல் ரத்தம் வருவதை கண்டு, பல தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதுவரை ரூ.1.30 லட்சம் கடனாக பெற்று செலவு செய்துள்ளேன். அன்றாடம் கூலி வேலை செய்து 3 பெண் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமம் அடைந்துள்ளேன். தற்போது, அர்ச்சனாவின் வினோத நோய்க்கான மருத்துவ செலவிற்கு போதிய வசதி இல்லாமல் உள்ளேன் என்று கூறினார்.

    இதுகுறித்து கலெக்டர் பிரபாகர் கூறுகையில், சிறுமி அர்ச்சனாவின் ரத்த தட்டணுக்களில் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இது ஒரு அரிய நோயாகும். உயர்தர சிகிச்சையளிக்க, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு அனுமதி பெற்று, சிறுமிக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  #KrishnagiriGirl #BloodSweating
    ×