search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை அதிகாரி"

    • கடுமையான வேலைக்கு நடுவிலும் தினமும் இரவில் உட்கார்ந்து படிப்பேன்.
    • விடா முயற்சியுடன் கடுமையான இன்னல்களுக்கும், வேலை பளுவுக்கும் இடையில் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகன் சுப்புராஜ்(வயது 27). இவர் கடையநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 முடித்தார். பள்ளி படிப்பின்போது ஏரோனாட்டிக்கல் என்ஜினீயர் ஆக வேண்டும் என்று எண்ணத்தை கொண்ட சுப்புராஜ், கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார்.

    அங்கு 4 ஆண்டுகள் படித்துவிட்டு கடந்த 2016-ம் ஆண்டு சுப்புராஜ் சென்னைக்கு சென்றார். அங்கு சக நண்பர்களுடன் சேர்ந்து வேலை தேடியபோது தான் வனத்துறையின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

    இதனால் எப்படியாவது அரசு வேலையில் அதுவும் வனத்துறை பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று முடிவு செய்த சுப்புராஜ் சென்னையில் உள்ள அரசின் அகில இந்திய குடிமை பணிகள் தேர்வாணையத்தில் 2 ஆண்டுகள் படித்தார்.

    அதனை தொடர்ந்து அரசு தேர்வு எழுதிய சுப்புராஜ் கடந்த 2019-ம் ஆண்டு வனவர் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சாத்தான்குளம் பகுதியில் வனவராக தனது முதல் பணியை தொடங்கினார்.

    ஆனாலும் அதே வனத்துறையில் உயர்பதவியில் அமர வேண்டும் என்று விரும்பிய சுப்புராஜ் கடந்த 4 ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் தேர்வு எழுதி வந்தார். சமீபத்தில் அவர் டி.எஸ்.பி. தரத்திலான பணிக்கு தேர்வாகி உள்ளார். இதற்காக ஏற்கனவே 5 முறை தேர்வு எழுதிய அவர் 6-வது முறையாக சமீபத்தில் தேர்வெழுதி வனத்துறை அதிகாரியாக வெற்றி பெற்றுள்ளார்.

    நான் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,088 மதிப்பெண்கள் பெற்றேன். விமானத்துறையில் சேர்வதற்காக கோவையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன்.

    ஆனால் அதன்பின்னரே வனத்துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதை அறிந்து அந்த பணியில் சேர என்னை தயார்படுத்திக்கொண்டனே். இதற்காக கடுமையாக உழைத்து நான் வெற்றி பெற்றுள்ளேன்.

    வனவராக வெற்றி பெற்ற பின்னரும், எனக்கு ஆசை விடவில்லை. எனக்கு மேல் உள்ள அதிகாரிகளை பார்க்கும்போதெல்லாம் அவர்களை போன்று உயரவேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே இருந்தது.

    இதனால் வனப்பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோதே உயர் பதவிக்கு படித்து வந்தேன். கடுமையான வேலைக்கு நடுவிலும் தினமும் இரவில் உட்கார்ந்து படிப்பேன். அதன் மூலமாக 6-வது முயற்சியில் நான் வெற்றி பெற்று தற்போது வனத்துறை அதிகாரியாகி உள்ளேன்.

    என்னுடன் சேர்த்து மொத்தம் 108 பேர் தேர்ச்சி அடைந்துள்ளோம். இதில் நான் அகில இந்திய அளவில் 57-வது இடத்தை பிடித்துள்ளேன். நிறையபேர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டே அரசு வேலைக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள்.

    ஆனால் வேலை பளு காரணமாக அந்த லட்சியத்தை பாதியில் விட்டு விடுகிறார்கள். எனவே விடா முயற்சியுடன் கடுமையான இன்னல்களுக்கும், வேலை பளுவுக்கும் இடையில் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×