search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தாக்குதல்"

    • பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார்.
    • மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சிங்காரா வனசரக எல்லைக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது80).

    இவர் தனது மகன் கணபதி என்பவருடன் வசித்து வருகிறார்.

    பெருமாள் தனது வீட்டில் 16-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகே உள்ள வனத்திற்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்றும் வழக்கம்போல பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

    இரவு வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கணபதி வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிகள், அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து வாழைதோட்டம் கிராமத்தையொட்டிய வனப்பகுதிகளுக்குள் தேடி பார்த்தனர். இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இன்று காலை 2-வது நாளாக மாயமான பெருமாளை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்காபுராம் காவல் பகுதிக்குட்பட்ட கல்லட்டி கூடுதல் காப்புக்காட்டில் பெருமாள் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆடு மேய்க்க சென்ற அவரை யானை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

    யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக லாரியில் ஏற்றி செல்லப்படும் கரும்புகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் காத்திருக்கிறது.

    மேலும் சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என்று யானைகள் தேடி வருகிறது.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு யானை கூட்டம் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்சை விரட்டியது. டிரைவர் சாதுர்யமாக பஸ்சை பின்நோக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கி யானைகளிடம் இருந்து தப்பித்த சம்பவம் நடந்தது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி தனது தோட்டத்தில் இரவு காவல் பணி மேற்கொண்டார். அப்போது அவரது தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் யானை தாக்கி இறந்த விவசாயி மல்லப்பா உடலையும் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை பிடிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சின்னதம்பி என்ற கும்கி யானை வனத்துறை லாரி மூலம் ஏற்றப்பட்டு இன்று காலை தாளவாடி பகுதிக்கு வந்தடைந்தது.

    இன்று மாலைக்குள் மற்றொரு கும்கி யானை ராஜவர்தன் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து 2 கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்க உள்ளனர். ஒற்றை யானையை பிடிக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளதால் தாளவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.
    • இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (70) விவசாயி.

    இவரது மனைவி சிவம்மா. இவர்களுக்கு சித்துமல்லு என்ற மகனும், ரேகா என்ற மகளும் உள்ளனர். மல்லப்பாவுக்கு தர்மாபுரம் என்ற பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. இதில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு 2 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை வாழை தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.

    யானையின் சத்தம் கேட்டு காவலுக்கு இருந்த விவசாயி மல்லப்பா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒற்றை யானை மல்லப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி காலில் மிதித்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விவசாயி மல்லப்பா பலியானார். இன்று காலை மல்லப்பா வீடு திரும்பாததால் குடும்பத்தினர் வந்து பார்த்த போது அவர் யானை தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் மலைகிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். #Farmer
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே உள்ள மாதள்ளி என்ற ஊரை சேர்ந்தவர் பிரபுசாமி (வயது 60) விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். யானை மற்றும் காட்டு பன்றிகள் தொல்லை இருப்பதால் தினமும் இரவு தனது தோட்டத்துக்கு பாதுகாப்பு பணிக்காக செல்வார். அங்கேயே தூங்கிக்கொள்வார்.

    நேற்று இரவும் இதேபோல் பிரபுசாமி தனது தோட்டத்துக்கு காவல் பணிக்காக சென்றார். இரவில் தகர டப்பாவால் அடித்தப்படி யானை மற்றும் காட்டு பன்றிகள் உள்ளே நுழையாதபடி சத்தம் போட்டப்படி தனது தோட்டத்துக்குள் சுற்றி வந்தார். அப்போது அங்கு ஏற்கனவே புகுந்திருந்த ஒரு யானை பிரபுசாமியை தூக்கி வீசியது. இதில் அவரது தலை மற்றும் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் தூக்கி வீசியதில் அவரது காலும் முறிந்து படுகாயத்துடன் கிடந்தார்.

    அவர் போட்ட சத்தத்தில் பக்கத்து விவசாய தோட்டத்தில் காவல் பணியில் இருந்த மற்ற விவசாயிகள் ஓடிவந்தனர். யானை காட்டுக்குள் நுழைந்ததும் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு படுகாயத்துடன் சத்தம் போட்டப்படி கிடந்த அவரை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே விவசாயி பிரபுசாமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×