search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியப்பு"

    • மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இதேப்போல், மற்றொரு படகில் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 2 பைபர் படகுகளில் 9 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு திடீரென 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த சுமார் 600 கிலோ மீன்பிடிவலையை எடுத்து கொண்டு படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிற்கு சென்று அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.

    இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். காயங்களுடன் அவர்களை கண்ட சக மீனவர்கள் அவர்களிடம் கேட்கையில் தாங்கள் தாக்கப்பட்டு குறித்து கூறினர். தொடர்ந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×