search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமாகவில்லை"

    திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. ஆபரணங்கள் எதுவும் மாயமாக வில்லை என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. ஆபரணங்கள் எதுவும் மாயமாக வில்லை என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திர மாநில அரசு அர்ச்சகர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களில் 65 வயது பூர்த்தியானவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது. அதன்படியே ஏழுமலையான் கோவிலின் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலுவுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். அவர் கூறுவது சரியல்ல. கோவிலில் பெரிய ஜீயர்கள் சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள் ஆகியோரின் மேற்பார்வையில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் முறைப்படி நடக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்துக்களின் புனித தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க, வைர நகைகளை கணக்கெடுக்க நீதிபதிகள் வாத்வா, ஜெகநாதராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி ஆபரணங்களை கணக்கெடுத்தனர். அவர்கள் கணக்கெடுத்த விவரங்களை ஆவணமாக தயாரித்து தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது. தங்க, வைர ஆபரணங்களின் விவரங்களை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    1952-ம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பதி ஏழு மலையானுக்கு பல்வேறு பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக கொடுத்துள்ளனர். அந்த ஆபரணங்களின் பெயர் விவரம் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு மகாராஜா காணிக்கையாக கொடுத்த ஆபரணங்களை ஏழுமலையானுக்கு அணிவித்து வருகிறோம். திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. எந்த ஒரு ஆபரணங்களும் மாயமாகவில்லை. ஆகம பண்டிதர்கள் குழு அனுமதி அளித்தால், பலத்த பாதுகாப்போடு பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும்.

    2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழா கருடசேவையின்போது உற்சவர் மலையப்பசாமிக்கு மைசூரு மகாராஜா காணிக்கையாக கொடுத்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. அந்த ஆபரணத்தில் பதிக்கப்பட்டு இருந்த கல் ஒன்று பக்தர்கள் வீசிய நாணயங்களால் உடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து எடுக்க தேவஸ்தானம் தவறிவிட்டதாகவும் ரமணதீட்சிதலு குற்றம்சாட்டி வருகிறார். பக்தர்கள் வீசிய நாணயங்களால் கல் உடைந்தது சரிதான். ஆனால், உடைந்த கல்லை எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். அந்த கல் உடைந்து கீழே விழுந்த விவரத்தை நீதிபதி ஜெகநாதராவ் தயாரித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உடைந்த கல் சிதறல்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

    திருமலையில் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை லட்டுக்கு பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வந்துள்ளது. அந்த பணிகள் அனைத்தும் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலு, ஆகம பண்டிதர் சுந்தரவரதன், பெரிய ஜீயர்சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் ஆகியோரின் ஆலோசனைப்படி கட்டப்பட்டு உள்ளது. செங்கற்களால் கட்டினால் கற்கள் சூடேறி சிதைந்து விடும். ஆகையால் கற்கள் சூடேறாமல் பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு உடன் இருந்தார். 
    ×